மோடி கூட்டிய கூட்டத்தில் இரங்கசாமி நிதிஷ்குமார் பங்கேற்காதது ஏன்?

ஜூலை 27 அன்று டெல்லி பிரகதி மைதானத்தில் நிதி ஆயோக்கின் 9 ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கும் 8 மாநில முதல்வர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்குமாறு நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி முதல்வர் இரங்கசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சி நடந்த போதிலும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துவிட்டார். கடந்த காலங்களில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலத்தின் பிரதிநிதியாக அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்ற நிலையில் இம்முறை அவரையும் அனுப்பவில்லை.

பாஜக மீது கடும் அதிருப்தியில் இருப்பதால் இரங்கசாமி இந்தக் கூட்டத்தைத் திட்டமிட்டே புறக்கணித்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பங்கேற்கவில்லை. அம்மாநிலத்தின் சார்பில் துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

முக்கியமான இந்தக் கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்துகொள்ளாததற்கான சரியான காரணத்தை உடனடியாக வெளியிடவில்லை.

பின்னர்,நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ளாதது இது முதல் முறையல்ல. முன்னதாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திலும் முதல்வர் நிதீஷ்குமார் கலந்துகொள்ளவில்லை, பிகார் பிரநிதியாக அப்போதைய துணை முதல்வர் கலந்துகொண்டார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் இரண்டு துணை முதல்வர்களும் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டது.

மேலும், பிகாரைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்களும் நிதி ஆயோக்கில் உறுப்பினர்களாக பங்கேற்றார்கள். வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாட்டின் மிக உயரிய கொள்கை உக்திகளை வகுக்க நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் நிா்வாகக் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனர்.

நிதீஷ்குமார் பங்கேற்காதது குறித்து அவருடைய கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. தியாகி கூறுகையில், அரசியல் காரணங்களுக்காக அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நிதிஷ் குமார் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.இப்படிப்பட்ட சூழலில் பாஜக கூட்டணியிலுள்ள இரங்கசாமி மற்றும் நிதீஷ்குமார் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் அது பேசுபொருளாகியிருக்கிறது.

Leave a Response