நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் சோதனை – பெ.மணியரசன் கண்டனம்

நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் இல்லத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனை அரசின் ஒடுக்குமுறைச் செயல் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்……

நாம் தமிழர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள சென்னை கொளத்தூர் பாலாஜி, திருச்சி சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறை இரஞ்சித்குமார், காளப்பட்டி முருகன், தென்காசி மாவட்டம் விசுவநாதப்பேரி மதிவாணன், சிவகங்கை மாவட்டம் பகைவரைவென்றான் கிராமம் விஷ்ணு பிரதாப் ஆகிய ஆறு பேர் வீடுகளில், நேற்று (02.02.204) விடியற்காலையில் இந்திய அரசின் தேசியப் புலனாய்வு முகமைக் காவல்படையினர் (N.I.A) திடீர்ச் சோதனைகள் நடத்தி யுள்ளனர். அவர்களின் கைப்பேசிகள், சிம்கார்டுகள், பென்டிரைவ்கள், மடிக்கணினிகள் போன்றவற்றையும் சில புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு வந்துள்ளார்கள்.

இந்த ஆறு பேரையும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறைத் தமிழ்நாடு செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களையும் 5.2.2024 அன்று சென்னையில் தங்கள் தலைமையகத்திற்கு விசாரணைக்கு வரச் சொல்லி அழைப்பாணையும் கொடுத்துள்ளார்கள்.

ஏற்கெனவே, கடந்த 2022 ஆம் ஆண்டு மே மோதம் (19.5.2022), “உலகத் தமிழர் நீதிமன்றம்” (World Tamils Justice Court) என்ற அமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்குள் ஆயுதப் போராட்டம் நடத்திட, துப்பாக்கிகள் செய்த சேலம் செவ்வாய்ப்பேட்டை பொறியாளர் சஞ்சய் பிரகாஷ், கிச்சிப்பாளையம் நவீன் சக்கரவர்த்தி (எம்.பி.ஏ. பட்டதாரி) மற்றும் கபிலன் ஆகிய மூவரைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. மேற்படி மூவரும் பிணையில் வெளிவந்து விட்டனர். அவர்கள் மீது வழக்கு விசாரணை தனியே நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த மூவருடனும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் ஏழு பேரும் தொடர்பு வைத்திருந்தார்கள் என்றும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை இந்த ஏழு பேரும் ஆதரிக்கிறார்கள் என்றும் தேசியப் புலனாய்வுக் காவல்படையினர் (என்.ஐ.ஏ) குற்றம்சாட்டி இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அந்த மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 18 மாதங்களாக மேற்படி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறார்கள். இதுவரை விசாரணை செய்யாமல் அவர்களை இப்போது, 2024 மக்களவைத் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் விசாரணைக்கு அழைப்பாணை (சம்மன்) கொடுப்பதும் அவர்களின் வீடுகளில் 4 மணி நேரம் – 5 மணி நேரம் சோதனையிடுவதும், அவை ஊடகங்களில் வருமாறு செய்வதும் இயல்பான புலன் விசாரணையாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்களின் அரசியல் நகர்வாகவே தெரிகிறது.

இந்தியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் 02.02.2024 நடத்திய வீடுகள் சோதனையில் பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம்” என்ற நூலையும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் எழுதிய “திருப்பி அடிப்பேன்” நூலையும் கைப்பற்றி வந்ததாகக் கூறுகிறார்கள். இந்நூல்கள் பல ஆண்டுகளாகப் பல்லாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்தவை. இந்நூல்கள் தடை செய்யப்பட்டவை அல்ல!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உலகத்தில் எங்கேயும் செயல்படவில்லை. 2009 மே 18 க்குப் பிறகு அந்த அமைப்பு இல்லை. ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே அதைத் தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்துள்ளார்கள். நாம் தமிழர் கட்சித் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, நிரந்தரமான தேர்தல் சின்னத்தைப் பெற்ற – வெளிப்படையான அரசியல் கட்சியாக 13 ஆண்டுகளாகப் பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 7% வாக்கு வாங்கி, தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக மக்களின் செல்வாக்கு பெற்றுள்ளது. இப்போது வரப்போகும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அரசியல் பணிகளில் அக்கட்சியினர் முழுவீச்சில் இறங்கிச் செயல்படுகிறார்கள். இக்கட்சி தமிழ் – தமிழர் – தமிழ்நாடு உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுகிறது.

இவ்வாறான பின்னணியில், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை “ஆயுதப்போர்” நடத்தும் தீவிரவாதிகள் என்று சித்தரித்து, அவர்கள் மீது அரசின் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்காக தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) காவல்படை ஏவிவிடப்பட்டுள்ளதா என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சியாளர்களின் இம்முன்னெடுப்பு சனநாயக மறுப்பு; வன்மையான கண்டனத்திற்குரியது!

இந்திய அரசு கொடிய வழக்குப் புனையும் நோக்கிலான இந்த விசாரணையைக் கைவிட்டு, நீதிக்குத் தலைவணங்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response