கூச முனுசாமி வீரப்பன் – விமர்சனம்

சந்தனக் கடத்தல் மன்னன் என அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்ட வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஆவணமாக்கி வெளிவந்துள்ளது கூச முனுசாமி வீரப்பன் எனும் ஆவணப்படத் தொடர்.

வீரப்பன் ஏன் சந்தன மரங்களைக் கடத்தினார்? இரு மாநில காவல் அதிகாரிகளையும்,பொது மக்கள் சிலரையும் ஏன் கொலை செய்தார்? குற்றச் செயல்களிலிருந்து வீரப்பன் தன்னை விடுவித்துக்கொண்டு மறு வாழ்க்கைக்கு முயற்சி செய்தாரா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த இணையத்தொடர்.

வீரப்பனைப் பற்றி பல அறியாத தகவல்கள் தொடரின் பலம். வீரப்பனின் அரசியல் அறிவு, புத்தக வாசிப்பு, உலகச் செய்திகளை அறிந்துகொள்வதில் உள்ள ஆர்வம், தன் தோழர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. அவர் மீது பழியைச் சுமத்தி பயனடைந்த சுயநலவாதிகள் யார்? அண்டை மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட நிலையில் தமிழர்களுக்குத் தஞ்சம் கொடுத்தது எப்படி? என அவருடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் தொடரை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது.

அரசியல் தலைவர்கள் குறித்தும் நடிகர்கள் குறித்தும் அவர் கூறும் கருத்துகள் கவனம் பெறுகின்றன.

சதீஷ் ரகுநாதன் அதிரடியான பின்னணி இசை மூலம் தொடரை தாங்கிப்பிடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் கழுகுப் பார்சவையில் அகன்ற காடுகளைப் படமாக்கிய விதம் அருமை.

ஆவணப் படம் போல் குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்கிகொள்ளாமல் முழுநீள சினிமாவைப் போல் மிக நேர்த்தியாக வீரப்பனின் வாழ்க்கையைச் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் சரத் ஜோதி.

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் இரண்டு மாநில அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் இல்லை. அந்தப்பாதிப்புகளை இந்தத்தொடர் பதிவு செய்திருக்கிறது.

அரசாங்கம் உட்பட எல்லோரும் பாதிக்கப்பட்ட மக்களை மறந்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள்.

இந்தத் தொடரின் மூலம் அம்மக்களுக்கான நீதி வேண்டும் என்கிற குரல்கள் மீண்டும் எழும் என்பதே இந்தத் தொடரின் வெற்றி என்று சொல்லலாம்.

-பாவை

தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி தயாரித்துள்ள ‘கூச முனிசாமி வீரப்பன்’ இணையத் தொடர்
ஜீ -5 (zee5tamil) ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

Leave a Response