பாராளுமன்றத்துக்குள் நடந்த பயங்கரம் – மக்கள் அதிர்ச்சி

பாராளுமன்ற மக்களவையில் இன்று (டிசம்பர் 13,2023) பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்தனர். அவர்கள் கைகளில் புகை கக்கும் கருவி வைத்திருந்ததும், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, அந்த இருவரும் பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறிய அந்த நபர்களைப் பிடிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் உதவினர். அவர்கள் இருவரையும் அவைப் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இதற்கிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பெண் ஒருவர் முழக்கம் எழுப்பியபடி இருக்க அவரைக் காவல்துறையினர் அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியிருந்தன.

மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருக்கை மீது குதித்த நபரிடம் இருந்து தாம் தான் புகை கக்கிய கேனைப் பறித்து வெளியே எறிந்ததாகக் கூறியுள்ளார் காங்கிரசு உறுப்பினர் குர்ஜீத் சிங் அஜ்லா. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “திடீரென மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் குதித்தனர். அதில் ஒருவர் கையில் கேன் இருந்தது. அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வந்தது. நான் அந்த நபரிடமிருந்து கேனைப் பறித்து தூக்கி வெளியே எறிந்தேன். இன்று நடந்தது மிகப் பெரிய பாதுகாப்பு மீறல்” என்றார்.

சரியாக 1 மணியளவில் பூஜ்ஜிய நேர நிகழ்வின்போது இந்தச் சம்பவம் நடந்தது. அவைக்குள் குதித்தவர்கள் ‘சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்’ என்று முழக்கமிட்டுள்ளனர். இதேபோல் அவைக்கு வெளியே கைதான இரு பெண்களும் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டனர். அந்தப் பெண்களில் ஒருவர் தன் பெயர் நீலம் என்று தெரிவித்ததாகவும், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக காவல் துறையிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த டெல்லி காவல் ஆணையர், பாதுகாப்பு மீறல் எப்படி சாத்தியமானது என்பது தொடர்பாக விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவைத்தலைவர் ஓம் பிர்லா மக்களவையில் பேசும்போது, “பூஜ்ஜிய நேரத்தில் நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி காவல்துறையினருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் அது வெறும் புகை என தெரியவந்துள்ளது. எனவே, புகை குறித்து அச்சப்படத் தேவையில்லை” என கூறினார்.

இதையடுத்து, வழக்கமான நாடாளுமன்ற அலுவலைத் தொடர அவர் முயன்றார். அப்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதற்குப் பதில் அளித்த சபாநாயகர், “விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக அத்துமீறிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இருவரும்கூட கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து காங்கிரசு உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பேச அனுமதித்தார். அப்போது பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,
2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கான நினைவிடத்தில் நாங்கள் மலரஞ்சலி செலுத்தினோம். இந்தச் சூழலில், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே இன்று தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 2001 இல் நடந்ததுபோன்ற தாக்குதல் அல்ல இது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அதேநேரத்தில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும், உயர்மட்டப் பாதுகாப்பு தோல்வி அடைந்துவிட்டது என்பதும் தற்போது நிரூபணமாகி இருக்கிறது. அனைத்து உறுப்பினர்களும் துணிச்சலாகச் செயல்பட்டு அந்த இருவரையும் பிடித்துவிட்டனர். ஆனால், இவ்வளவு நடந்து கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே போனார்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, “நாடாளுமன்றத்தின் மீது இன்று தாக்குதல் நடத்தப்படும் என்று சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று நான் கேள்வி எழுப்பினேன். ஆனால், அந்தக் கேள்வி புறக்கணிக்கப்பட்டது. இது மிகப் பெரிய பாதுகாப்பு தோல்வி” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் பரிந்துரைக் கடிதம் அளித்த மக்களவை உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு மக்களவையின் பாஜக உறுப்பினர் பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் பெயர் சஹார் சர்மா, மனோரஞ்சன் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளராக உள்ளே செல்வதற்கு குறிப்பிட்ட எம்பியின் பரிந்துரை கடிதம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும். அவர்களுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் மேலும் அடையாள அட்டைகளை சரிபார்க்கப்படும் அதன்பிறகுதான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்பட்டுவருகின்றன.மக்கள் அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response