திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் தகவல்

சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர உணவு விடுதியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி இராமச்சந்திரன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் 87 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 7 மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய பண்ருட்டி இராமச்சந்திரன்….

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துவிட்டார், அதுபற்றிக் கேட்க வேண்டாம். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஆளுநருக்கே தெரியவில்லை. கூட்டணி தொடர்பாக எங்களுடன் நேரடியாக பாஜகவினர் பேசி வருகிறார்கள். வேண்டுமென்றால் நம்முடன் பாஜக வரட்டும்; அவர்கள் தயவுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை; பகைத்துக் கொள்ளவும் வேண்டாம். நமக்கு தொண்டர்கள் பலம் உள்ளது; தினகரன் நமக்குத் துணையாக தோழமையாகச் செயல்பட உள்ளார். சசிகலாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; விரைவில் அழைப்பு வரும்

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது…

அடுத்த மாநாடு கொங்கு மண்டலத்தில் நடைபெறவுள்ளது. விரைவில் தேதி அறிவிக்கப்படும். கூட்டணியைப் பொறுத்தவரை எங்களிடமும் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். தேர்தலின்போது கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம்.

கடந்த காலத்தில் பழனிசாமி அரசைக் காப்பாற்றினோம். அதற்குரிய செயல் அவரிடம் இல்லை. இனிமேலும் அந்தத் தவறை செய்யமாட்டோம். அமமுகவுடன் தோழமை உணர்வுடன் இணைந்திருக்கிறோம். நாங்கள் திமுகவின் பி டீம் அல்ல. ஏ முதல் இசட் டீம் வரை பழனிசாமிதான். அவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுகவை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஓபிஎஸ் அணியினருக்கான அதிகாரப்பூர்வ கட்சி நாளிதழ் தொடங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ‘நமது புரட்சி தொண்டன்’ என்ற பெயரில் வெளியாகவிருக்கும் அந்த ஏட்டின் ஆசிரியராக கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் பணியாற்றவுள்ளார்.

Leave a Response