இராமதாசையும் வன்னியர்களையும் திமுக ஏமாற்றியதா? – விவாதத்துக்குரிய கட்டுரை

25.4.2023 ஆம் தேதி முரசொலி நாளிதழில் “வன்னியர் உள்ளிட்டோருக்கு முத்தமிழறிஞர் வழங்கிய 20% இட ஒதுக்கீடு – பொன் முட்டையிடும் வாத்து” என்ற தலைப்பில் குத்தாலம்‌. பி. கல்யாணம் என்பவர் “பெயரில்” வெளிவந்திருக்கும் கட்டுரை வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு தரக்கூடாது என்ற முடிவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து விட்டாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அச்சத்தை ஏறக்குறைய உறுதிப்படுத்தியிருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் டிஎன்வி செந்தில்குமார் அளித்திருக்கும் பேட்டி. 10.5% தனி இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு தேவையற்றது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அவர்.

சில இரண்டாம் நிலை திமுக தலைவர்களும் தென் மாவட்டங்களில் வன்னியர்கள் இல்லை என்பதால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி இட ஒதுக்கீடு தருவது சரியாக இருக்காது என்று கூறியிருப்பதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு கூறுகிறது.

இவை அனைத்தும் 10.5% தனி இட ஒதுக்கீடு விவகாரத்தில் “தரக் கூடாது” என்ற இறுதி முடிவை திமுக எடுத்துவிட்டது என்பதையே காட்டுவதாக என்னைப் போன்றோர் உணர்கிறோம்.

தனி இட ஒதுக்கீடு தருவதற்கு நீதிமன்றம் கேட்ட தரவுகளை வழங்குவதற்காக செயலாற்றுவது போல நடித்து இரண்டு ஆண்டு காலமாக மருத்துவர் அய்யாவையும், வன்னியர் சமூகத்தையும் திமுக ஏமாற்றி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

முரசொலியில் வெளிவந்திருக்கும் கட்டுரை மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களே மிகுதியான வாய்ப்புப் பெறுகிறார்கள் என்று கூறுகிறது. அதற்கு ஒரு படி மேலே போய், அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் உண்மை வெளிவரும் என்று கூறுகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் கடந்த 25 ஆண்டுகளில் வன்னியர் சமூகம் பெற்ற பங்கு என்ன? என்பதை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கையளிக்க வேண்டும் என்பதுதான் மருத்துவர் அய்யாவின் முதன்மைக் கோரிக்கை. அதைச் செய்வதற்கு முனைப்புக் காட்டாத திமுக, வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று சொல்வது நகைப்புக்குரியது.

முரசொலி கட்டுரையில் 10.5% இட ஒதுக்கீடு தரப்படக்கூடாது என்பதற்காகக் காட்டப்படுகிற காரணங்களில் ஒன்று, ஒரு குறிப்பிட்ட சாதிக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதாகும்.இது முழுப் பொய். கேரளத்தில் ஈழவ சமுதாயத்துக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அருந்ததிய மக்களுக்கு 3% தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவற்றை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்திருக்கின்றன.

புகழ்பெற்ற இந்திரா சகானி வழக்கில் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பிலும் ஒரு சாதிக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் தடையில்லை என்பது கூறப்பட்டிருக்கிறது. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பிலும், மாண்பமை நீதிபதி நாகேஸ்வர ராவ் அவர்கள் ‘தரவுகளின் அடிப்படையில் வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தடையேதும் இல்லை’ என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

’20 சதவிகித இட ஒதுக்கீட்டை எந்த மாற்றமும் செய்யாமல் தொடர்வது தான் வன்னியர்களுக்குப் பயன் தரும்’ என்று முரசொலி கட்டுரை கூறுகிறது. தருமபுரியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு படி மேலே போய் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 20% இட ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிட்டால்தான் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் தான் வன்னியர்களுக்கு வாய்ப்பு மிகுதியாக இருக்கும் என்றும் 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அந்த வாய்ப்பு பறிபோகும் என்றும் கூறுகிறார்.

அப்படியென்றால் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டையே ரத்து செய்து விட்டு முன்பிருந்தது போல பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 50% இட ஒதுக்கீட்டின் கீழ் வன்னியர்கள் கொண்டுவரப்பட்டால் இன்னும் அதிகமான இடங்களுக்குப் போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறலாமே? இட ஒதுக்கீடே இல்லை என்றால் 100% இடங்களிலும் வன்னியர்கள் போட்டியிடலாமே என்று கூறலாமே?

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 50% இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற தொகுப்பில் இருந்த முன்னேறிய சமூகங்களுடன் வன்னியர்களால் போட்டியிட்டு வாய்ப்புகளைப் பெற முடியவில்லை என்பதால் தான் தனி இட ஒதுக்கீட்டுக்கான போராட்டமே நடைபெற்றது. இட ஒதுக்கீடு வழங்கப்படுவதின் அடிப்படைகளைக் கூட திமுகவினர் அறியவில்லை என்பதுதான் வேதனை.

திமுகவில் இருக்கும் வன்னியர்களின் பேச்சு “ஒடுக்கப்பட்ட மக்கள் பொது அரசியல் கட்சிகளில் இருக்கும் போது அவர்களால் தங்களுடைய சமூகங்களின் முன்னேற்றத்தைப் பற்றி பேச முடியாது. அவர்களுக்கு தாங்கள் உறுப்பினர்களாக இருக்கும் கட்சிகளின் கொள்கை முடிவுகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்ற அம்பேத்கரின் கூற்றை மெய்ப்பிக்கின்றது.

வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததற்கான முதன்மைக் காரணமே மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்குக் கிடைக்க வேண்டிய முறையான பங்கு கிடைக்கவில்லை என்பதுதான். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பணிகளுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய போட்டித் தேர்வில் மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரும் வன்னியர் அல்ல. வன்னியர்களுக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய பங்கு இரண்டு ஆகும். அதேபோல உதவி ஆட்சியர் பணிக்காக தேர்வாணையம் அண்மையில் நடத்திய போட்டித் தேர்வில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வெற்றி பெற்ற நான்கு பேரில் ஒருவர் கூட வன்னியர் இல்லை.

மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையில் இலட்சக்கணக்கான மக்கள் போராடி, காவல்துறையின் நடவடிக்கைகளால் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி, பல்லாயிரக்கணக்கானோர் சிறைகளுக்குச் சென்று, 26 உயிர்களை இழந்து வன்னியர்கள் பெற்ற வரலாற்று வெற்றி 20% இட ஒதுக்கீடு. அந்த இட ஒதுக்கீட்டை வழங்கிய கலைஞர் “நான் ஒரு கனி தருகிறேன். அதை சுவைத்துப் பாருங்கள்” என்று சொன்ன அன்றே மருத்துவர் அய்யா சொன்னார் “நீங்கள் தந்திருப்பது அழுகிய கனி. அதைச் சுவைக்க முடியாது” என்று. மருத்துவர் அய்யாவின் கூற்று உண்மை என்பதை 20% இட ஒதுக்கீட்டின் பயன்கள் யாரை அடைந்திருக்கின்றன என்ற உண்மை காட்டுகிறது.
இந்நிலையில் தங்களுடைய உரிமைக்காக, முறையான பங்குக்காக மீண்டும் ஒரு மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வன்னியர்களுக்கு வேறு வழியில்லை.

சமூக நீதிக்கான இயக்கம் என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளும் திமுக கடந்த நூற்றாண்டில் இட ஒதுக்கீட்டுக்காக தான் செய்தது என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

1926 ஆம் ஆண்டு நீதிக் கட்சியால் வழங்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவச் சட்டத்தை தன்னுடைய பெருமையாக திமுக கொண்டாடுகிறது. நீதிக் கட்சியின் தொடர்ச்சி என்று சொல்லிக் கொள்வதற்கு திராவிடர் கழகத்திற்கு உரிமை இருக்கிறது. திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறியவர்களால் தொடங்கப்பட்ட கட்சி திமுக என்ற வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். முதல் அரசியல் சாசனத் திருத்தம் தந்தை பெரியாரின் வெற்றி. அதைப் பெற்றுத் தந்த காமராஜர் போற்றுதலுக்குரியவர். அந்த வெற்றிக்கு திமுக தனி உரிமை கோர முடியாது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீடு மருத்துவர் அய்யாவின் போராட்டத்தின் வெற்றி. முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 3% இட ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு வழங்கப்படும் 3% இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்குப் பின்னால் மருத்துவர் அய்யாவின் போராட்டங்கள் இருக்கின்றன.

இவற்றில் எந்த ஒரு இட ஒதுக்கீட்டுக்கும் திமுக தனிப் பெருமை கோர முடியாது.

மாறாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில், சில முன்னேறிய சமூகங்களை இணைத்து அந்த இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்த வரலாறு டாக்டர் கலைஞருக்கு உண்டு. மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கான வாய்ப்புப் பறிபோனதற்கும் அந்த இட ஒதுக்கீட்டில், மறைந்த டாக்டர் கலைஞர் 2000களின் பிற்பகுதியில் கொண்டு வந்த விதி மாற்றங்கள் தான் காரணம்.
தமிழ்நாட்டில் இன்று வரை 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதற்கான பெருமை மறைந்த செல்வி ஜெயலலிதாவையே சேரும். 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக ஒன்பதாவது அட்டவணையில் இதனைச் சேர்ப்பதற்கு அவர் செய்த முயற்சிகள் வரலாற்றுப் பதிவுகளாகும்.

குறுகிய காலமே ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவர் அய்யாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியும், அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கியும் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் தன்னுடைய பெயரை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டார்.

இட ஒதுக்கீடு உள்ளிட்ட எல்லா நிகர் நோக்கு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். தேவைக்கு ஏற்றவாறு அவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கருநாடக மாநிலத்தில் வழங்கப்படுவது போல தமிழ்நாட்டிலும் இட ஒதுக்கீட்டை ஆறு தொகுப்புகளாக வழங்க வேண்டும் என்பது மருத்துவர் அய்யா அவர்கள் முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை. டெல்லி சென்று சமூகநீதி மாநாடு நடத்தும் திமுக, இட ஒதுக்கீட்டின் பயன்கள் பல்வேறு சமூகங்களை எவ்வாறு அடைந்திருக்கின்றன, அதில் எத்தகைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. செயல்படுவதும் இல்லை.
சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றை உள்ளத்தில் இருத்திக் கொள்ளாமல், வெறும் உதட்டுச் சாயமாக மட்டுமே திமுக பூசிக் கொள்கிறதோ என்று எண்ண வைக்கின்றன முரசொலி கட்டுரையும், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் டிஎன்வி செந்தில்குமார் போன்ற திமுகவினரின் பேச்சும்.

சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சமூக நீதிப் போராட்டங்களில் முதன்மையானது மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையில் நடைபெற்ற வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டம். உழுதுண்டு வாழும் வன்னியர் சமூகம் அச்சம் அறியாதது. தியாகத்தைப் போற்றும் சமுதாயம் அது.

தனது உரிமைகளுக்காக இன்னொரு முறை துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அவற்றையும் பூமாலைகளாக ஏற்று போராட ஆயத்தமாக இருக்கிறது வன்னியர் சமுதாயம்.

அது மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைக்காகக் காத்திருக்கிறது.

“நீதி இல்லையேல். அமைதி இல்லை” (No justice. No peace)

– மருத்துவர். இரா.செந்தில்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் மேனாள் உறுப்பினர்
27.4.2023

Leave a Response