சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் – இரா.முத்தரசன் கோரிக்கை

தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு இருமுறை கட்டணங்களை உயர்த்தி சட்டபூர்வமாக கொள்ளையடிக்க பாஜக ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பச்சைக் கொடி காட்டியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இரத்த நாளங்களாக விளங்குவது சாலைப் போக்குவரத்தாகும். வாகனங்கள் பெருகி வரும் எண்ணிக்கைக்கு தக்கபடி சாலைகள் அமைப்பது, விரிவு படுத்துவது, மேம்பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் மேம்படுத்துவது என அத்தியாவசியப் பணிகளை பாஜக ஒன்றிய அரசு கை கழுவி விட்டது.

சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புப் பணிகள் தனியாருக்குத் தாரை வார்த்து விட்டது. தனியார் நிறுவனங்கள் நாடெங்கும் சுங்கச் சாவடிகள் அமைத்து கடுமையான கட்டணங்கள் வசூலித்து வருகின்றன. தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு இருமுறை கட்டணங்களை உயர்த்தி சட்டப்பூர்வமாக கொள்ளையடிக்க பாஜக ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

இன்று முதல் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தோடு கூடுதலாக ரூபாய் 60 வரை செலுத்த வேண்டும். பாஸ்ட் டேக் என்ற முறையில் முன்கட்டணம் (Free Paid) செலுத்தும் முறைக்கு செல்லாத வாகனங்கள் இரட்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு வாகன உரிமைதாரர்களும், பயனாளிகளும் ஆளாகியுள்ளனர். பல சுங்கச் சாவடிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக புகார்களும் எழுந்துள்ளன.

சேவைச் சாலைகள் அமைக்காமலும், தரமான சாலை அமைக்காமலும் ஊழலில் ஊறிப்போன அதிகார வர்க்கமும், தனியார் நிறுவனங்களும் கூட்டாக மக்களின் தலையில் சுமை ஏற்றுவதை வேடிக்கைப் பார்த்து வரும் பாஜக ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், சுங்கச்சாவடிகளை நீக்கி, மக்கள் சுதந்திரமாக பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response