பாட்டிகளை வைத்து போட்டியாளர்களைச் சாடிய இராமதாசு

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வழக்கம் போல் இல்லாமல் இரண்டு பாட்டிகள் உரையாடுவது போல இருக்கிறது.

அந்த அறிக்கை……

சீதா பாட்டி, ராதாப்பாட்டி (03.05.2019)

‘‘காக்கை குருவி எங்கள் ஜாதி -நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்’’

சீதா பாட்டி: என்னடி ராதா… 4 நாளா ஆளையே காணோம்… தலைமறைவாயிட்டியா?

ராதா பாட்டி: ஏன்க்கா…. நான் ஏன் தலைமறைவாக ஆகப் போறேன். வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டு, வீட்டை விட்டு வெளியில் போகாமல் முடங்கிக் கிடக்க நான் என்ன மற்றவர்களை சுரண்டி வாழும் போலி மத போதகரா? நான் உழைத்து வாழும் பெண் சிங்கம்க்கா…. பெண் சிங்கம்!

சீதா பாட்டி: ஏண்டி…. 4 நாளா ஆளைக் காணுமேன்னு தானடி கேட்டேன். அதுக்கு ஏண்டி இந்த பொங்கு பொங்குற? சரி… இவ்ளோ சூடா பேசுறியே, என்ன விஷயம்? சொல்லு!

ராதா பாட்டி: போன வாரம் சிறுத்தைக் கட்சி ஒரு போராட்டம் நடந்தது. அதுல அவங்க கூட்டணி கட்சித் தலைவருங்க அத்தனை பேரும் கலந்து கொண்டாங்க. அவர்களில் சிலர் சிறுத்தைகளுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு பாமகவையும், வன்னியர்களையும் அவதூறாக விமர்சித்து பேசினாங்க. அதிலும் குறிப்பாக போலி மத போதகர் எஸ்ரா சற்குணமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசனும் வரம்பு மீறி வன்னியர்களை கொச்சைப்படுத்தி பேசினாங்களாம். அதுக்கு தான் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு கடுமையான கண்டனம் தெரிவித்தார். வன்னியர்களும் கடுமையாக கொந்தளிச்சிட்டு இருக்காங்க!

சீதா பாட்டி: நியாயம் தான். ஆனால், அவங்க பேசுன பேச்சை அந்தக் கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் கூட கண்டிக்கவில்லையா?

ராதா பாட்டி: ம்ம்ம்ம்…. கண்டிச்சாங்க…. கண்டிச்சாங்க. ஆனால், யாரைக் கண்டிச்சாங்கங்கிறது தான் கொடுமையிலும் கொடுமை.

சீதா பாட்டி: என்ன கொடுமை? யாரை கண்டிச்சாங்க?

ராதா பாட்டி: எஸ்ரா சற்குணம் மற்றும் முத்தரசன் பேச்சை மருத்துவர் ராமதாசு கண்டித்து அறிக்கை விட்டார். அவர் சரியான கேள்விகளைத் தான் கேட்டிருந்தார். ஆனால், அவரோட அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில இருக்கிறதாகக் கூறி கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. அதுமட்டுமல்ல…. அவங்க வன்னியர்களை கொச்சைப்படுத்தி பேசவே இல்லன்னும் சாதிச்சிருக்காங்க.

சீதா பாட்டி: அடேங்கப்பா…. அப்படியா சொல்றாங்க. உண்மையாகவே அவங்க வன்னியர்களை கொச்சைப்படுத்தி பேசவில்லையா?

ராதா பாட்டி: அட…. நீங்க வேற அக்கா. அங்க பேசுனவங்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அத்தனை பேரும் வன்னியர்களுக்கு எதிராக நாக்கில் விஷத்தையும், வன்மத்தையும் கலந்து பேசுனாங்க. அவங்க பேசுனத நான் சொல்றேன். அதைக் கேட்டு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

சீதா பாட்டி: சரி சொல்லு…

ராதா பாட்டி: முத்தரசன் பேசும் போது, ‘‘ உங்களுக்கு பல பட்டப்பேரு இருக்கு. அதையெல்லாம் நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. மரம்வெட்டின்னு கூட இங்க சொன்னாங்க’’ன்னு கூறி விட்டு‘‘ நக்சலைட்டுகளை எதற்காக சுட்டுக்கொல்ல வேண்டும் என்று சொல்கிறோம்…. நக்சலைட்டுகளை எதற்காக தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். அதைப் போலத் தான் இவர்களையும் செய்ய வேண்டும்’’ என்றும் கொக்கரித்தார். அப்புறம் தன்னைத் தானே கிழட்டு சிறுத்தை என்று கூறிக்கொண்ட சற்குணம்,‘‘வன்னியர்களாகிய நீங்கள் மரம்வெட்டிகளாக இருந்து, மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளி, பாறாங்கற்களையெல்லாம் உருட்டி வைத்து மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தினீர்கள்’’ என்று கூறி விமர்சித்தார்.

சீதா பாட்டி: அடப்பாவிகளா இப்படியா பேசினாங்க. ஒரு மத போதகர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை இவ்வளவு மோசமாகவா விமர்சிப்பார். இது சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் செயல் அல்லவா?

பாட்டாளிகளை தோழர்களாக மதிக்க வேண்டிய கம்யூனிஸ்ட் தலைவரின் வாயிலிருந்து அவர்களின் சமுதாயத்தை இழிவு படுத்தும் வார்த்தைகள் வரலாமா? அப்படி வந்தால் அவர் கம்யூனிஸ்டாக இருக்க தகுதியானவரா? இதைக் கேட்கும் போது எனக்கே கொதிக்கிறதே… சம்பந்தப்பட்டவர்கள் கொந்தளிப்பது இயல்பு தானே?

ராதா பாட்டி: சரிதான்க்கா. அதை விட கொடுமை என்னவென்றால் முத்தரசனும், சற்குணமும் நல்லிணக்கத்தை விரும்புபவர்களாம். அவர்கள் அப்படி பேசவில்லையாம். பேசாத ஒன்றை பேசியதாக நினைத்துக் கொண்டு மருத்துவர் இராமதாசு தான் அறிக்கை கொடுக்கிறார்னு ஸ்டாலினும், வைகோவும் சொல்றாங்க. முத்தரசனோ வன்னியர்களை விமர்சிச்சதை நிரூபிச்சா அரசியலில் இருந்து விலகத் தயார்னு சொல்லியிருக்கிறார்.

சீதா பாட்டி: அடக் கொடுமையே…. அருவருக்கத்தக்க வகையிலும், அநாகரிகமாகவும், அசிங்கமாகவும் வன்னியர்களை கொடுஞ்சொற்களால் விமர்சிச்சா அவர்கள் சமூக நல்லிணக்கவாதிகள். ஆனால், அதை தட்டிக் கேட்டால் வன்முறையாமா? இது என்ன நியாயம்?
‘மரம்வெட்டிகள்’ என்று விமர்சித்ததை விட வேறு என்ன ஆதாரம் வேண்டுமாம் முத்தரசனுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும்? சில நேரங்களில் சிலரின் முகமூடிகள் கிழிந்து கொள்ளும்; சில நேரங்களில் சிலர் அவர்களே முகமூடிகளை கிழித்துக் கொள்வார்கள். இவற்றில் இவர்கள் இரண்டாவது வகை போலும். நல்ல வேளை போலி மத போதகருக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று பரிந்துரைக்காமல் விட்டார்களே?

ராதா பாட்டி: ஆனாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அக்கா. இது ஒரு மோசமான வெறுப்புப் பேச்சு (Hate Speech). இதைக் கண்டிக்கும் அளவுக்கு அங்கு நியாயமான தலைவர்களே இல்லையா? தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பதாக கூறுவாரே வைகோ…. அவர் கூட இதை தட்டிக் கேட்கவில்லைக்கா.

சீதா பாட்டி: அட நீ ஒருத்திடி. பொன்பரப்பியில் ஊனமுற்ற அப்பாவி ஒருவரைத் தாக்கியும், இன்னொருவரை பாட்டிலால் குத்தியும், வன்னிய சமுதாய பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியும் கலவரத்தை தூண்டியவர்கள் சிறுத்தைகள் தான் என்பது தெரிந்திருந்தும் அதை கண்டிக்காதவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுடி

ராதா பாட்டி: ஆமாம்க்கா… அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். ஆனால், நாம் பாரதியார் பாடியவாறு, ‘காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’’ என்று வாழ்க்கையைத் தொடருவோம்.

இவ்வாறு அந்த அறிக்கை அமைந்துள்ளது.

Leave a Response