எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பாசகவை காங்கிரசு வீழ்த்தும் – இராகுல் அதிரடி

காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி, செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கினார்.

100 நாட்களைக் கடந்துள்ளது அவருடைய பயணம். இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய இராகுல் காந்தி கூறியதாவது…..

காங்கிரசுக் கட்சி முடிந்து விட்டதாக நிறையப் பேர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் காங்கிரசுக் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது, என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பாரதிய ஜனதாவை காங்கிரசு வீழ்த்தும்.

காங்கிரசு காணாமல் போகிறது என்ற கருத்து பாஜகவினரால் பரப்பப்படுகிறது. காங்கிரசு ஒரு கருத்தியல் சார்ந்த கட்சி, பாசிசத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறது. காங்கிரசுக் கட்சியின் கொள்கைகள் மறைந்துவிட்டதாக பாஜக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது.

காங்கிரசு அரசியல் ரீதியாகப் பலம் வாய்ந்த கட்சி. சிலர் காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், சிலருக்கு பாஜகவை எதிர்கொள்ளத் தைரியம் இல்லை என்றால், அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவது வரவேற்கத்தக்கது. எங்களுக்கு அவர்கள் வேண்டாம்.

காங்கிரசுக் கட்சியை நம்பி, பாசிசத்தை நம்பாதவர்களையே நாங்கள் விரும்புகிறோம். பாரத் ஜோடோ யாத்திரையின் போது, கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் காங்கிரசை மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம்.

கட்சிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை,எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது. ஆனால் நமது அரசு இதை ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைக்கிறது

இவ்வாறு இராகுல்காந்தி கூறியுள்ளார்.

Leave a Response