தமிழ்த்தேசியத்தலைவர் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அன்புத்தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துகள் என சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..
வரலாற்றுப்பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக, முகவரியாக என எல்லாவுமாக விளங்குகிற நமது தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 68 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமித உணர்வும் அடைகிறேன்.
‘உலகில் தோன்றிய சில மகத்தானவர்களின் வாழ்க்கை வரலாறே உலக வரலாறு’ என்கிறார் புரட்சியாளர் லெனின். எத்தனையோ புரட்சியாளர்களைக் கண்ட இந்தப் பூமிப்பந்து, காலத்தை உருவாக்கும் கதாநாயகர்களைத் தனது புனிதப்பக்கங்களில் நிறைத்துக்கொண்டு நிற்காமல் சுழன்றுகொண்டிருக்கிறது. ஒரு மனிதனைத் தாண்டி, இன்னொரு மனிதன் என்றைக்குத் தோன்றினானோ, அன்றே, ‘நான் பெரியவன்! நீ சிறியவன்!’ என்கிற தான்மை உணர்ச்சி தோன்றி, மனித இனத்தில் பிரிவினைகளை ஏற்படுத்திவிட்டது. “நான் ஆண்டான்! நீ அடிமை!” என சர்வாதிகாரக்குரல்கள் திசையெட்டும் ஒலிக்கத் தொடங்கியபோது, அதனை மாற்றி அமைக்க மகத்தான புரட்சியாளர்கள் உலகில் தோன்றத்தொடங்கினார்கள்.
அப்படித்தான் எம் இனத்திலும் எத்தனையோ வீரமும், அறமும் செறிந்த மகத்தானவர்கள் கால ஓட்டத்தில் கணக்கில்லாமல் தோன்றி, தங்களின் புகழையும் தரணியில் பதித்திருக்கிறார்கள். அப்படித் தோன்றிய மகத்தானவர்களில் ஒப்பற்றவராய், மங்காதப்புகழ் ஒளிகொண்டு நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்கிறவராக தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திகழ்கிறார்கள்.
தமிழர்களின் தாய் நிலமான ஈழ மண்ணில் வந்து குடியேறிய சிங்களர் காலம் காலமாய் வாழ்ந்து வந்த மண்ணின் பூர்வக்குடிமக்களான தமிழர்களை சொந்த மண்ணிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றி, பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து வாழ்ந்து வந்த நிலத்தை விட்டுத் துரத்தி, அவர்களது உரிமைகள் யாவற்றையும் மறுத்து, உயிரைப் பறித்து பேரினவாத ஆட்சியை நிலைநாட்டியபோது, தமிழர்களது கண்ணீரைத் துடைக்க எழுந்து வந்த கரிகாலனாய், பிறந்து வந்த பிரபாகரனாய் எம் தலைவர் தோன்றினார்.
“உயிர் உன்னதமானது என்பதனை நான் அறிவேன்; ஆனால், அந்த உயிரினும் உன்னதமானது எமது உரிமை; எமது விடுதலை; எமது கௌரவம்” என முழக்கமிட்டு, உயிரை ஒரு குப்பியில் அடைத்து எந்த நேரமும் விளையத் துடிக்கும் மரணத்தை தன் மார்பிலேயே தொங்க விட்டுக்கொண்டு, தன் சொந்த நாட்டு மக்களையே படையாகக் கட்டி, நிலத்திலும், நீரிலும், வானிலும் சண்டையிட்டு எப்படை வந்தாலும் எதிர்த்துக்காட்டி, உலகத்தின் விழிகளை வியப்பால் விரியச்செய்தவர் எம் தலைவர். இப்படியும் ஒரு மனிதர் வாழ முடியுமா? என எவரும் வியக்கும் அளவுக்கு அறத்தின் வழி நின்று, மறம் மொழி பகர்ந்த சான்றோனாய் , மகத்தான காவியங்களிலும் உலகப்புகழ் பெற்ற இலக்கியங்களில் மட்டுமே காணப்படக்கூடிய மாபெரும் புனிதராய், எதிரிகூட குற்றஞ்சாட்ட முடியாத எல்லாளனாய் வாழ்ந்துகாட்டியவர் எம் தலைவர். பிணமாய் விழும் இனம் காக்க, சினம் கொண்டு தனி ஒரு மனிதனாய் பழுதடைந்த ஒற்றைத் துப்பாக்கியோடு விடுதலைக்காக வனம் புகுந்த அவரது வாழ்க்கை ஒரு தனி நபரின் வாழ்க்கை சரிதமாக இல்லாமல் ஒரு இனத்தின் வரலாறாக மாறிப்போனது.
காக்கைக்கும், குருவிக்கும்கூட சிறகு விரித்து பறக்க வரம்பற்ற வானம் இருக்கிறது. ஆனால், தமிழர் என்ற தேசிய இனத்திற்கு உள்ளங்கை அளவுக்குக்கூட ஒரு நாடில்லை என்பதை உணர்ந்த எம் தேசியத்தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் யாராலும் நினைத்துப்பார்க்க முடியாத தமிழீழ சோசலிசக்குடியரசு என்கிற கனவு நாட்டினை கட்டியெழுப்பினார். தமிழர்களை அடிமைப்படுத்த வந்த சிங்களர்களுக்கு எந்த மொழியில் சொன்னால் புரிகிறதோ, அந்த மொழியை, ஆயுத வழியாய் கொண்டு, துப்பாக்கி என்பது அடுத்த மனிதனை சுட்டுக்கொன்று உயிர்பறிக்கும் கருவி அல்ல; அது என் இனத்தாரை காக்கின்ற கருவி என்பதை உணர்த்தும் வகையில் துவக்கேந்தி, தமிழர் விடுதலைக்காக களம் அமைத்தார் எம் தலைவர். அந்தப் புனித இலட்சியத்தை உணர்ந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தங்கள் உயிரையும் தரத் துணிந்து கலங்கமற்ற தங்கள் தலைவனுக்காகக் களத்தில் நின்றார்கள். தான் பெற்ற பிள்ளைகளாய் கருதி அவர்களை வளர்த்து, வார்த்தெடுத்து, பயிற்சிகொடுத்து உலகமே வியக்கும் மாவீரர்களாய் மாற்றி நிறுத்தி மன உறுதியிலும், அளவற்ற தியாகத்திலும் இதுபோன்ற படையை எவரும் கண்டதில்லை என உலகத்தார் கருதும் வகையில் விடுதலைப்புலிகள் என்கிற மக்கள் இராணுவத்தை கட்டியெழுப்பினார் எம் தலைவர். ஒரு போரில் எதிரி நாட்டின் மீதுகூட பயன்படுத்தக்கூடாத தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு அப்பாவி தமிழர்களை சிங்கள பேரினவாத அரசு கொன்றுகுவித்தபோது, சிங்கள இராணுவத்தை மட்டுமே எதிரியாகக் கொண்டு, ‘சிங்கள மக்கள் எப்போதும் எங்கள் எதிரிகள் அல்லர்’ என அறிவித்து, விமானம் கட்டிப் பறந்தபோதும்கூட அப்பாவி மக்கள் மீது குண்டுவீசாமல், எதிரி நிலைகள் மீது குண்டு வீசிவிட்டு திரும்புகிற எம் இனத்தின் காவல் தெய்வங்களான விடுதலைப்புலிகளின் அறவுணர்ச்சி என்பது எம் தலைவர் என் உயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அறம் ததும்பும் மனசாட்சி!
உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் தன்னிறைவான வாழ்க்கையை எம் தமிழீழ மக்கள் வாழ்ந்ததற்கு திறம் வாய்ந்த தலைவரின் ஆட்சியே மகத்தான சாட்சி! தாய்மொழிக்கல்வியும், சாதி ஒழிப்பும் இம்மண்ணில் வாழ்கின்ற நமக்கெல்லாம் கனவாகத் திகழும்போது அதை வாழும் காலத்திலேயே சாதித்துக் காட்டிய சரித்திர நாயகன் எம் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
மழலையர் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தமிழே பாடமொழியாக உருவாக்கி வீதிகளில் மட்டுமல்ல நீதிமன்றங்கள், இராணுவக்கட்டளைகள் என தமிழீழ நாட்டில் எங்கு காண்கிலும் தனித்தமிழ் மொழியை ஆட்சி மொழியாக, மாட்சி மொழியாக விளங்கியதற்கு ஒற்றைக்காரணம் எம் தலைவர் ஆவார். ஆணுக்கு நிகராய் பெண்களை முன்னிறுத்தி, தாயக விடுதலைக்காக போராடுகிற போராளிகளாக அவர்களை மாற்றி ஆணும், பெண்ணும் சமம் என்கிற இலட்சியச்சொற்களை நடைமுறைப்படுத்தியவர் எம் தலைவர் ஆவார். தான் உண்டு குடும்பம் உண்டு என வாழ்ந்து, தன் குடும்பத்திற்கு பதவிவாங்க அலைந்த தலைவர்களுக்கு மத்தியில், தான் பிறந்த இனத்துக்காக தன் குடும்பத்தை பலிகொடுத்து தியாகப்பெருவாழ்க்கை வாழ்ந்து, ‘தலைவர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாய் மாறிப்போனவர் எம் தலைவர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்கள். அவர் வாழ்ந்த தியாக பெருவாழ்க்கையே எமது கொள்கை சாசனமாக எம் முன்னால் நின்று சுடர்விடுகிறது. அதிலிருந்தே எமக்கான இலட்சியப்பற்றுறுதியை இடைவிடாது பெறுகிறோம்.
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவரே என் உயிர் மூச்சாக உள்ளிருந்து என்னை இயக்குகிறார்; நான் திரும்பும் திசையெல்லாம் அவர் முகம்கண்டே இலட்சிய உறுதி அடைகிறேன். என் மகனுக்குக்கூட அவர் பெயர்சூட்டி, அவனிலும் என் அண்ணனைத்தான் காண்கிறேன்.
எங்கோ பிறந்த என்னைத் தேர்ந்தெடுத்து, இந்த இனமானப் பணிக்காக என்னை உருவாக்கி, அளவற்ற இன்னல்களுக்கும், துயரங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் மத்தியில் என்னை களமாட வைத்து, என்னை இயக்கிக் கொண்டிருக்கிற, எல்லா வகை துயர் இருட்டிலும் நான் நம்பிக்கைகொண்டு காண்கின்ற கலங்கரை விளக்கம் என் உயிர் அண்ணன் மீது பிரபாகரன் அவர்கள். அவர் மொழி பற்றி, அவர் வழிநடப்பது ஒன்றே எனது வாழ்நாள் கடமையாக, நான் அடைந்த தகுதியாகக் கருதுகிறேன். அவரே என்னை இயக்கும் பேராற்றல்!
ஆருயிர் அண்ணன் அன்புத்தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு தம்பியின் பேரன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பேருவகையும், பெருமிதமும் அடைகிறேன்!
வாழ்க தலைவர் பிரபாகரன்!
வெல்க தமிழீழம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.