அகில இந்திய காங்கிரசுத் தலைவர் இராகுல்காந்தி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7 அன்று தொடங்கிய நடைபயணம், நேற்று 38 ஆவது நாளில் கர்நாடக மாநிலம் பல்லாரியை சென்றடைந்தது.
1000 கிலோ மீட்டரை இராகுல்காந்தியின் பயணம் கடந்திருக்கிறது. இந்நிலையில், பல்லாரி நகரில் உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தப் பொதுக்கூட்டத்தில் இராகுல்காந்தி பேசியதாவது….
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டருக்கு பாரத் ஜோடோ பாதயாத்திரையை தொடங்கி உள்ளேன். ஆரம்பத்தில் 3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொள்வது சுலபமான விசயம் இல்லை என்று நினைத்தோம். பாதயாத்திரை தொடங்கிய பின்பு சுலபமானது. சிறு குழந்தைகள், மாற்றுதிறனாளிகள், முதியவர்கள், இளைஞர்கள் பாதயாத்திரையில் கலந்து கொண்டு பேசுவது, இன்னும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.
இந்த பாதயாத்திரைக்கு பாரத் ஜோடோ என்று பெயர் வைத்துள்ளோம். பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நமது நாடு பிளவுபடுகிறது.கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடக்கும் பாதயாத்திரையில் பல்வேறு மதம், சாதி, இளைஞர்கள், பெண்கள் நம்முடன் ஒற்றுமையாகச் சேர்ந்து பயணிக்கிறார்கள்.
பாதயாத்திரையில் யாரோ ஒருவர் கீழே விழுந்தால் கூட, அனைவரும் வந்து உதவி செய்கிறார்கள். பாதயாத்திரையில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் பொறியியல் உள்ளிட்ட படிப்பைப் படிக்க இருப்பதாகச் சொன்னார்கள். படித்து முடித்ததுடன் வேலை கிடைக்குமா? என்று நான் கேட்டால், இல்லை என்று பதில் சொன்னார்கள்.
2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பா.ஜனதாவினர் கூறினார்கள். நாட்டில் 2½ இலட்சம் அரசு வேலை காலியாக உள்ளது. நாட்டில் 12½ கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலை இருக்கிறது.
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி தான் நடக்கிறது. இங்கு காவல்துறை வேலையில் சேர வேண்டும் என்றால், ரூ.80 இலட்சம் இலஞ்சம் கொடுக்க வேண்டும். பணம் இருந்தால் அரசு வேலையில் சேரலாம். பணம் இல்லாத ஏழைகள், வேலை வாய்ப்பற்றவர்களாகவே இருக்க வேண்டும். அரசு வேலையில் சேர வேண்டும் என்றால், லஞ்சம் கொடுத்தே தீர வேண்டும் என்ற நிலை உள்ளது.
இந்த அரசு 40 சதவீத கமிஷன் அரசாகும். ஏதாவது வேலை நடக்க வேண்டும் என்றால், 40 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும்.
வேலை வாய்ப்பின்மைக்கு எதிராக தற்போது நாடு முழுவதும் குரல் எழுப்பப்படுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வரும் முன்பு ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது, ரூ.1,000-மாக உயர்ந்து விட்டது.
பல்லாரிக்கும், எனது குடும்பத்திற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எனது தாய் சோனியா காந்தி பல்லாரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். எனது தாய்க்கு பல்லாரி மாவட்ட மக்கள் ஆதரவு அளித்திருந்தார்கள். எனது பாட்டியான முன்னாள் பிரதமர் இந்தியா காந்தி சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனை எல்லாம் என்னால் மறக்க முடியாது.
கர்நாடகத்தில் என்னுடன் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல்லாரி மாவட்டம் வெயில் அதிகமாகும். அதனை நானும் அனுபவித்தேன். கர்நாடகத்தில் காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பல்லாரி மக்களுக்கு அனைத்து விதமான உதவிகள், திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தத் தயாராக இருக்கிறேன். காங்கிரசுக் கட்சியை பல்லாரி மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு இராகுல்காந்தி பேசினார்.