மாணவிகளுக்குப் பாதுகாப்பில்லை தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு – பழ.நெடுமாறன் அறிக்கை

மாணவிகளின் சாவுகள் தொடர்வது நாட்டிற்குத் தலைகுனிவாகும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…..

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பள்ளி மாணவியின் சாவு குறித்த உண்மைகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதற்குள் இந்த வாரத்தில் மேலும் சில பள்ளிகளில் மாணவிகளின் உயிர்கள் பறிபோயுள்ளன.

சென்னை கல்லூரி ஒன்றின் மாணவி இரவில் விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது வழிமறிக்கப்பட்டு அவர் மீது பாலியல் வன்முறை நிகழ்த்த முயற்சி நடந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்நாளெல்லாம் பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியார் அவர்களின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அங்கு முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஒருவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

நமது கல்விக்கூடங்களில் பயிலும் மாணவிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவது தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வேண்டாத சூழலை முற்றிலுமாகக் களைவதற்கு அரசு முன்வரவேண்டும். படிக்கும் மாணவிகளின் விடுதிகளும், பணிபுரியும் பெண்களின் விடுதிகளும் காவல்துறையால் பலமாக கண்காணிக்கப்படவேண்டும். தொடர்வண்டிகளிலும், பேருந்துகளிலும் பயணம் செய்யும் பெண்களுக்கும் தக்க பாதுகாப்பு இருக்கவேண்டும்.

“நள்ளிரவில் ஒரு பெண் நகைகளை அணிந்துகொண்டு ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் பாதுகாப்பாக செல்லும் நிலை ஏற்படும் நாள் எதுவோ அதுதான் நமக்கு விடுதலை பெற்ற நாளாகும்” என அண்ணல் காந்தியடிகள் கூறினார். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளாகியும் இன்னும் இந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை நீடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசும், மக்களும் முன்வந்து செயலாற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response