மதுரை மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் செயல்வீரர்கள், ஆலோசனைக் கூட்டம் மதுரை சிந்தாமணி ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது……
கன்னியாகுமரி முதல் ஒசூர் வரை 234 தொகுதிகளிலும் அ.ம.மு.க.வின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். தொண்டர்களை வைத்து ஜெயலலிதாவின் பெயரிலேயே அ.ம.மு.க. செயல்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகித்த தலைமைப் பதவியை பணம் கொடுத்து தற்போது வாங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் குடுமிபிடிச் சண்டை போட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. கம்பெனி போல ஆகிவிட்டது. யார் அதிகமாக முதலீடு செய்கிறாரோ அவர் தலைமையாகிவிடலாம்.
எடப்பாடி பழனிச்சாமி அணியினர் செய்த ஊழலுக்கு நாள்தோறும் இலஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனால் எந்த வழக்கில் சிறைக்குச் செல்லப் போகிறமோ என்ற அச்சத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் இருந்து வருகின்றனர்.
அவர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்ற மட்டுமே உள்ளனர். ஜெயலலிதாவின் ஆட்சியைத் தர மாட்டார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற நிலையைத் தான் அனுபவிப்பார்கள்.
நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பு இல்லை. நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அவர்களது காலத்திலேயே அழிந்துபோவார்கள். பதவி என்பதை எதிர்பார்த்தவர்கள் தான் நம்மிடம் இருந்து ஓடிவிட்டனர்.
5 ஆண்டில் 3 பொதுச்செயலாளரை மாற்றி விட்டார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டார்கள்.அ.தி.மு.க.வை மீட்டெடுப்பவர்கள் அ.ம.மு.க.வினர் தான்.
நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என நான் எண்ணுகிறேன். ஆகஸ்டு 15 ஆம் தேதி அ.ம.மு.க. பொதுக்குழு, செயற்குழு நடைபெறவுள்ளது. நாம் யாருக்காகவும் பின்வாங்கப் போவதில்லை. யாரோடும் சமரசம் செய்வதில்லை. அ.ம.மு.கவின் ஆட்சியின் மூலம் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க முடியும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். அதற்காக அரும்பாடு பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.