அசைவ உணவு சாப்பிட்டால் அடிப்பதா? இது அட்டூழியம் – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் தொடுத்திட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

உணவு எனும் தனிமனித உரிமையில் தலையிட்டு, அதற்காகத் தாக்குதல் தொடுத்திருக்கிற பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

உணவு, உடை, வழிபாடு போன்றவையெல்லாம் தனிமனித விருப்பங்களைச் சார்ந்தவையாகும். அவற்றை மறுத்து, இடையூறு செய்வதும், அதனைக் காரணமாகக் காட்டி வன்முறைக்கு வித்திடுவதுமான மதவெறிச்செயல்கள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுக்கும் மனித உரிமை மீறலாகும். பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, இதுபோன்ற மோதல்களும், தாக்குதல்களும் இந்தியப்பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழான செயல்களாகும்.

ஆகவே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காகத் தாக்குதல் தொடுத்திட்ட அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கல்லூரியின் நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response