நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொதுப்பட்டியலிலுள்ள கல்வியை, மத்தியப்பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு, ‘ஒரே நாடு! ஒரே தேர்வு!’ எனும் ஒற்றைத்தேர்வு முறையை நாடு முழுக்கத் திணித்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, மத்தியில் அதிகாரத்தைக் குவித்து வரும் பாஜக அரசின் தொடர் செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவினைச் சிதைத்து, அவர்களது உயிரினைக் காவு வாங்கும் ‘நீட்’ எனும் கொடுந்தேர்வினை நீக்கக்கோரி, தமிழகமே போராடி வரும் நிலையில், தற்போது கலை, அறிவியல் உள்ளிட்டப் பட்டப்படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வினை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் ஒன்றிய அரசின் வன்செயல் கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, நீட் தேர்வைக் கொண்டு வந்து வந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை கானல் நீராக்கியது போல, தற்போது கலை, அறிவியல் மாணவர்களுக்கும் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டு வருவது கிராமத்து, அடித்தட்டு பின்புலம் கொண்ட ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்விக்கு வேட்டு வைக்கும் கயமைத்தனமாகும்.
3,5,8,10, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு, அனைத்துப் பட்டப்படிப்புக்கும் பொது நுழைவுத்தேர்வு, பள்ளிகளில் தொழிற்கல்வி, மும்மொழிக்கொள்கைத் திணிப்பு, இல்லந்தோறும் கல்வித்திட்டம், நீதிபோதனை எனும் பெயரில் மதக்கல்வி திணிப்பு, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே மதிய உணவு, மதிப்பெண்கள் அடிப்படையிலேயே கல்வி உதவித்தொகை என நீளும் புதியக்கல்விக்கொள்கையின் செயற்பாட்டுக்கூறுகளை நடைமுறைப்படுத்த எண்ணும் பாஜகவின் நோக்கமும், செயல்திட்டமும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், மாநிலங்களின் கல்வியுரிமையையும் முற்றாகத் தகர்க்கும் பேராபத்தாகும்.
மேலும், கல்வித்துறையின் ஒரு அங்கமான தேர்வுத்துறையினை, தேசிய தேர்வு முகமை என்ற ஒற்றை அமைப்பிடம் கையளிப்பது ஊழலுக்கும், இலஞ்சத்துக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும் சிக்கலை ஏற்படுத்திவிடும். பலதரப்பட்டத் தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் இந்திய ஒன்றியத்தின் கல்வி முறையை ஒரே ஒரு குழுவை வைத்து முடிவுசெய்ய முற்படுவது தேசிய இனங்களின் தனித்தன்மையையையும், அதன் இறையாண்மையையும் அழித்தொழிக்கும் கொடும்போக்காகும்.
மாநிலப்பட்டியலிலிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தாரைவார்த்ததன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் புதிய கல்விக்கொள்கையானது கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மொத்தமாய் ஒன்றியப்பட்டியலுக்குக் கொண்டுசெல்வதற்கான தொடக்க நிலைப்பணிகளே என்பதை எவராலும் மறுக்கவியலாது. இல்லந்தோறும் கல்வி, பள்ளிகளில் தொழிற்கல்வித்தேர்வு, நீதிபோதனை வகுப்பு என்று புதிய கல்விக்கொள்கையின் கூறுகளைப் பகுதி, பகுதியாக திமுக அரசு ஏற்கத் துணிந்துள்ள நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்வு’ என்ற பெயரில் கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்துப்பட்டப்படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வினை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.
ஆகவே, புதிய கல்விக்கொள்கையினை தமிழ்நாடு அணுவளவும் அனுமதிக்காது என்பதை உறுதி செய்யும் விதமாக அமைச்சரவையைக் கூட்டி, அதனைக் கொள்கை முடிவாக எடுக்க வேண்டும் எனவும், கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற, அனைத்து மாநில முதல்வர்களையும் ஒன்றிணைத்து, நாடு தழுவிய அளவில் மாபெரும் அணிச்சேர்க்கையை செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இத்தோடு, பல்கலைக்கழகத்துணைவேந்தர்களது நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க கேரளா, மேற்கு வங்கம் மற்றும் மராத்தியம் ஆகிய மாநில அரசுகள் முன்னெடுப்புகளைச் செய்வது போல, தமிழக அரசும் செய்ய முன்வர வேண்டுமெனவும், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கூட்டத் தொடரின்போது அதற்கான முன்னெடுப்புகளைச் செய்யப் போவதாக சட்டமன்றத்தில் கேள்வியொன்றுக்குப் பதில் கூறிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அதனை நடப்புக்கூட்டத்தொடரில் செய்து, உயர்கல்வியில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைப்பதற்கான வேலைகளைத் தொடங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.