
புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கில் பாரீசில் சர்வதேச பருவநிலை மாற்ற உச்சிமாநாடு நடந்து வரும் இந்த வேளையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக வெள்ளச்சேதமும், பருவநிலை மாற்றத்தின் ஒரு வெளிப்பாடுதான் என விஞ்ஞானிகள் ஒருபக்கம் கூறினாலும், 407 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நவம்பர் மாதத்தில், சுமார் 1218 மி.மீ. மழை கொட்டியதால் மூச்சடைத்து போயினர் மக்கள்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் திரும்பிய பக்கமெல்லாம் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் மக்கள் நிலைகுலைந்து போயினர். உடைமைகளையும், உறவுகளையும் பறிகொடுத்து பரிதவித்தனர்.
அப்படியும் இந்த பேய்மழை கருணை காட்டவில்லை. இந்த மாதத் தொடக்கத்தில் மீண்டும் தனது கோர முகத்தைக் காட்டியது. இல்லை… இல்லை… கோர தாண்டவமே ஆடிவிட்டது.
அதுவும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களை முழுமையாக வஞ்சம் தீர்த்து விட்டது என்றே கூறலாம்.
ஏற்கனவே ஒரு வெள்ளப்பெருக்கில் இருந்து மீண்டு சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருந்த சென்னை மக்கள் இம்முறை ஆடிப்போயினர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளம்… வெள்ளம்… வெள்ளம்…
பதறிப்போன அவர்கள் வீடுகளின் மாடிகளை நோக்கி ஓடினர். ஆனால் அவர்களை விட வேகமாக ஏறியது வெள்ளம். குடும்பம் குடும்பமாக கதறினர்… கூக்குரலிட்டனர்…
ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளம் ஆறுகளில் கரைபுரண்டதால், இதுவரை வெள்ளத்தையே சந்திக்காத பகுதி மக்கள் எல்லாம் உடைமைகளை விட்டு விட்டு கரைகளை நோக்கி ஓடினர், உறவுகளுடன்.
ஆனால் முடியவில்லை அவர்களால்… காரணம் இம்முறை வந்தது வெள்ளமல்ல… பிரளயம். குடம் குடமாக அவர்கள் வடித்த கண்ணீர் வெள்ளத்துடன் கலந்து மட்டத்தை உயர்த்திற்று.
ஆங்காங்கே முளைத்திருந்த நிவாரண முகாம்களில், குழந்தை குட்டிகளுடன் அகதிகளாக தஞ்சமடைந்தார்கள். வேளைக்கு உணவும், உறங்க இடமும் கிடைத்தாலும், வீடும், உடைமைகளும் பறிபோனதால் அவர்கள் உள்ளம் எரிகிறது இந்த நடுங்கும் குளிரிலும்.
முட்டளவு வெள்ளம் தானே வீட்டிலும்-வெளியிலும் சூழ்ந்துள்ளது, இங்கேயே காலத்தை ஓட்டுவோம் என நினைத்து வீட்டிலே இருப்போரின் நிலைமை இன்னும் மோசம். திரும்பிய புறமெல்லாம் தண்ணீர் இருந்தாலும் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் இல்லை.
தலைநகரின் தலையாய பிரச்சினையில் குடிநீர் தட்டுப்பாடும் ஒன்று என்பதால், மாநகராட்சி தண்ணீருடன், குடிநீர் கேன்களையும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த இக்கட்டு நேரத்தில் அவர்களின் தாகத்தை தீர்க்க, குடிநீர் நிறுவனங்களும் இல்லை. ஏன்? மாநகராட்சியும் இல்லை.
அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரம், நகர் முழுவதும் துண்டிக்கப்பட்டதால் கையறு நிலைக்கு தள்ளப்பட்டனர், மக்கள். குளிர்சாதனப்பெட்டிகளில் வைத்திருந்த காய்கறிகள் அழுகிவிட்டன. மின்சார அடுப்பு பயனற்று போய்விட்டது.
கதறி அழும் குழந்தைக்கு பால் கொடுத்து ஆசுவாசப்படுத்த, பால் இல்லை.
அத்தியாவசிய பொருட்கள் எதுவும் இல்லை. பொருள் இருந்தால் சமையல் செய்ய எரிவாயு இல்லை. வாங்கி வரலாம் என்றால், பக்கத்தில் கடைகளோ, சந்தையோ இல்லை. சற்று தூரம் சென்று வாங்கி வர படகு இல்லை.
கைபேசிச் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், சென்னையில் வாழும் தங்கள் சொந்தங்களின் நிலைமை என்ன ஆனது? என்று ஊரில் உள்ளவர்களால் அறிய முடியவில்லை. தங்களின் சோகத்தை ஊரில் உள்ள சொந்தங்களுடன் பகிர்ந்து ஆறுதல் அடைய சென்னைவாசிகளுக்கும் முடியவில்லை.
நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் நிலைமை சொல்லவும் வேண்டாம். உயிர்போகும் வலியை உணர்ந்து விட்டனர் அவர்கள்.
100 ஆண்டுகளில் இல்லாத மழை என்கிறார்கள். வானத்து சுனாமி என்கிறார்கள். ஆனால் இது எதுவும் புரியவில்லை பாமரர்களான அவர்களுக்கு. தங்கள் வாழ்க்கை சூனியமாகி விட்டது என்பது மட்டும் புலப்பட்டது.
சுனாமி கூட கண நேரத்தில் வந்து கையில் கிடைத்தது அனைத்தையும் அள்ளிக்கொண்டு போய்விடும். அதன் பாதிப்புகள் அதிகம் என்றாலும், நீடித்த சோகம் நிலைக்காது.
ஆனால் கடந்த ஒன்றரை மாதமாக நிரந்தர துயரத்தை தலைநகர்வாசிகள் அனுபவித்து வருகின்றனர். என்ன வாழ்க்கை இது? என வாய்விட்டு புலம்புகின்றனர் அவர்கள்.
வெள்ளம், இருள், பசி, தாகம், குளிர் என அனைத்தும் ஒருசேர வாட்டுவதால், நரக அனுபவத்தை நேரில் உணர்ந்து வருகின்றனர் என்று கூறினாலும் அது குறைவுதான்.
இந்தியப் பெருநகரங்களில் முக்கிய நகரான சென்னைக்கு ஏன் இந்த சோகம்? வரலாறு காணாத இந்த பிரளயத்துக்கு யார் காரணம்? சிங்கார சென்னை என்று மார்தட்டிக் கொண்ட அரசுகளும், அதிகாரிகளும் எங்கே?
விண்ணை முட்டும் அடுக்குமாடிகளாகவும், பெரிய பெரிய மால்களாகவும், நவீன ஐ.டி. நிறுவனங்களாகவும், பரந்து விரிந்த தொழிற்சாலைகளாகவும் காட்சி தரும் ‘சிங்கார’ சென்னையில், 1980-களின் கணக்குப்படி சின்னதும் பெரியதுமாக சுமார் 600 ஏரிகள் இருந்தன.
ஆனால் சென்னை தொடர்பாக கடந்த 2008-ல் வெளியிடப்பட்ட திட்ட அறிக்கை ஒன்றில், விரல் விட்டு எண்ணும் அளவிலான ஏரிகளே உயிருடன் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
தமிழக நீர்வளத்துறையின் கணக்குப்படி, இங்கு 1980-களில் இருந்த 19 ஏரிகளின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியே 1,130 ஹெக்டேர் அளவுக்கு இருந்தது. ஆனால் 2000-களின் தொடக்கத்தில் இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதி வெறும் 645 ஹெக்டேராக குறைந்திருந்தது.
சென்னையை வளப்படுத்திய இந்த ஏரிகள் இன்று எங்கே போனது? கோடிக்கணக்கான மக்களின் தாகம் தீர்த்த அந்த அழகிய நீர்நிலைகளுக்கு என்ன ஆயிற்று?
நீரேந்தி அழகாக காட்சியளிக்க வேண்டிய அவை, நவீன கட்டுமானங்களை தாங்கி அலங்கோலமாக மாறியுள்ளன. மருத்துவ கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அவற்றில் நவீன அறிவியலின் பெருமிதம் பளிச்சிடுகிறது.
இந்த ஏரிகள் அனைத்தும் இயற்கையாகவே மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை கொண்டிருந்தன. சென்னை நகர் வழியாக செல்லும் ஆறுகளில் ஒன்றான கூவம் ஆறு, சுமார் 75 ஏரிகளின் உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக விளங்கி வந்தது. அடையாறு, சுமார் 450 ஏரிகளின் உபரி நீரை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டது.
ஆனால் இன்று ஆறுகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் நிறைந்து சேரிகளாகவும், கட்டுமானங்கள் நிறைந்து நகரியங்களாகவும் காட்சியளிக்கிறது.
சென்னையில் நீர் நிலைகளை ஆக்கிர மித்தும், ஆற்றங்கரைகளை ஆக்கிரமித்தும் சுமார் ஒன்றரை லட்சம் கட்டிடங்கள் சட்ட விரோதமாக கட்டப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் கண்டறிந்து உள்ளது. இவற்றை அகற்ற உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், அந்த கட்டிடங்கள் தொடர்ந்து அங்கேயே காட்சியளிக்கின்றன.
ஏரியாக இருந்தாலும் சரி, ஆற்றங்கரைகளாக இருந்தாலும் சரி, நிலம் என்பது கட்டிடங்களுக்கு மட்டுமே, நீருக்கல்ல என்றுதான் நாம் நினைக்கிறோம். அதனால் தான் அரசும், கட்டுமான நிறுவனங்களும் எளிதாக ஏரிகளை ஆக்கிரமிக்கின்றனர்.
நீரை நிறைக்க வேண்டிய ஏரிகளில் கட்டுமானங்களை நிறைத்தால், மழைக்காலங்களில் அதிக அளவில் வரும் மழைநீருக்கு போக்கிடம் ஏது? படையெடுத்து வரும் வெள்ளத்துக்கு ஏரிகளில் உள்ள குடியிருப்புகள் தான் முதல் இலக்கு.
அடுத்ததாக சென்னையில் போதிய மழைநீர் வடிகால் வசதிகளும் இல்லை. 2 ஆயிரத்து 847 கி.மீ. தூரமுள்ள நகர சாலைகளில், வெறும் 855 கி.மீ. அளவுக்கு மட்டுமே மழைநீர் வடிகால்கள் உள்ளன.
அதுவும் மனிதர்கள் உருவாக்கிய வடிகால்கள் அனைத்தும் எந்தவகையிலும், இயற்கை வடிகால்களுக்கு மாற்றாக உருவாகவில்லை. எனவே நகரின் வெள்ளப்பெருக்கைக் கையாளுவது குறித்து அதிகாரிகள் கற்க வேண்டியதும் அவசியம்.
இது குறித்து எத்தனை முறை எச்சரிக்கை விடுத்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமலும், மழைநீர் வடிகால்களை உருவாக்காமலும் மெத்தனம் காட்டும் அரசு, வெள்ளப்பெருக்கு சூளும் போது, மக்களை மீட்க ராணுவத்தையும், மீட்புக்குழுவினரையும் அனுப்பி வைப்பதால் மட்டும் என்ன பயன்? எல்லாம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது தான்.
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டம் வகுத்து வருகிறார். ஆனால் சென்னையின் தற்போதைய துயரத்தை பார்க்கும் போது, ஸ்மார்ட் சிட்டிகளை விட, இருக்கும் நகரங்களை இதுபோன்ற துயரத்தில் இருந்து பாதுகாக்க வழி செய்வதே இன்றியமையாதது.


