தமிழீழம் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டிச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சூழற் பாதுகாப்பில் அவர்களைப் பங்குபற்றுநர்களாக்கும் நோக்கோடு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுத்துள்ள இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06.03.2022) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இத்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் கனடா உதயன் பத்திரிகையின் முதன்மை ஆசிரியரும், ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பின் தலைவருமான என்.ஆர்.லோகேந்திரலிங்கம் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வளவாளர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் விரிவுரையாளர் பா.பாலகணேசன், கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் மு. கனகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் திட்டம் தொடர்பான விளக்கவுரையை ஆற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது….
ஒரு அரசியற்கட்சி மேடைகளில் வெறுமனே அரசியலை மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது. அரசியல் மக்களுக்கானது என்ற வகையில், சமூகத்தைப் பாதிக்கும் அனைத்து விடயங்களிலும் அது கரிசனை கொள்வது கட்டாயமானதாகும். அதன் அடிப்படையிலேயே, பரீட்சைகளை மையப்படுத்திய கல்வி முறையால் வகுப்பறைகளுக்குள் புறொயிலர் கோழிகள் போல முடக்கப்பட்டிருக்கும் மாணவர்களை வகுப்பறைகளுக்கு வெளியே அழைத்து வந்து அவர்களிடையே இயல்பாகவே குடிகொண்டிருக்கும் இயற்கை மீதான ஆர்வத்தைச் சூழல் மீதான அக்கறையாக மாற்றும் வகையில் அவர்களுடன் சூழல் சார் அறிவைப் பகிர்ந்து கொள்ளவுள்ளோம்.
இதன் மூலம் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களைச் சூழல் பாதுகாப்பில் பார்வையாளர்களாக இல்லாது பங்குபற்றுநர்களாக ஆக்க முடியும்.
இதனை முன்னெடுப்பதற்கு வளவாளர்கள் கிராமங்கள் தோறும் மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நிகழ்த்தவுள்ளார்கள்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல்பாதுகாப்பு அணியும் மாணவர் அணியும் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம் கட்சி அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் அப்பாற்பட்டது. சூழல் நலனை, அதன் மூலம் இனத்தின் நலனை மாத்திரமே குறியாகக் கொண்டதாகும்.
இத்திட்டம் தங்கள் பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டும் என்று விரும்பும் பொது அமைப்புகள், பொது மக்கள் பசுமை இயக்கத்துடன் தொடர்பு கொண்டால் ஒழுங்கு செய்து தரப்படும் என்று குறிப்பிட்டார்.
அதிக எண்ணிக்கையான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்ட இத்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.