சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர், துணை மேயர் பதவிக்கு போட்டி இருந்தால்,மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை மேயராக பிரியாவும், துணை மேயராக மகேஷ்குமாரும் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை மேயரை தேர்ந்தெடுக்கப்பதற்காக மாநகராட்சி மாமன்றக் கூட்டம் காலை 9.30 மணிக்குக் கூடியது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு,சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், த.வேலு, தாயகம் கவி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது மாநராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மேயர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தார். அப்போது 74 ஆவது வட்டத்தில் போட்டியிட்ட பிரியா மட்டுமே காலை 9.35 மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை 76 வது வட்ட உறுப்பினர் தமிழ்ச்செல்வி, 69 ஆவது வட்ட உறுப்பினரான சரிதா மகேஷ் ஆகியோர் வழிமொழிந்தனர். மேலும் ஒரே ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் மேயராக பிரியா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் அறிவித்த பிறகு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு திமுக, காங்கிரசு மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். அதற்கு, சென்னை மேயரான பிரியா நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் சிவப்பு அங்கி, செங்கோல், 105 சவரன் தங்க செயின் வழங்கப்பட்டது.
அதைப் பெற்றுக் கொண்ட அவர் அங்கியை அணிந்து வந்தார். அவருக்கு முன்பாக மேயர் வருகிறார் என்று சொல்லிக் கொண்டே செல்ல மேயரான பிரியா மாமன்ற அரங்கிற்குள் வந்தார். அப்போது மேயர் இருக்கையின் அருகே வந்தபோது அவரிடம் வெள்ளியால் ஆன செங்கோலை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு வழங்கினர். அதை பெற்றுக் கொண்ட மேயர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுக் கொண்ட பிரியா, முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், தாயகம் கவி, வேலு ஆகியோருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து பிற்பகலில் மீண்டும் துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் தொடங்கியது. அதைப்போன்று மாநகராட்சி ஆணையர் துணை மேயருக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தார்.
169 ஆவது வட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.மகஷே்குமார் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருக்கு 172 ஆவது வட்ட உறுப்பினர் துரைராஜ், 114 ஆவது வட்ட உறுப்பினர் மதன்மோகன் ஆகியோர் வழிமொழிந்தனர். வேறு யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யாத நிலையில் மு.மகேஷ்குமார் துணை மேயராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து மகேஷ்குமார் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதன்பிறகு அவரை அமைச்சர்கள், மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயருக்கான இருக்கையில் அமர வைத்தனர். மேலும் அவருக்கு அனைவரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.
அதன்பிறகு துணை மேயராக இருக்கையில் அமர்ந்த பிறகு மகேஷ்குமார் பேசுகையில், ‘‘திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோருக்கும், தேர்தலைச் சிறப்பாக நடத்திய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார்.
இதையடுத்து அவரை அமைச்சர்கள், மேயர், ஆணையர் அவரை அழைத்து சென்று அவருடைய அறையில் உள்ள இருக்கையில் அமர வைத்தனர். துணை மேயருக்கு கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி ஊழியர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோர் மேயராக பதவியில் இருந்துள்ளனர். இவருக்கு முன்பாக, அந்த அறையில் உள்ள இருக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் அமர்ந்து பணி செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சிக்கு பெண் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். அதே நேரம், தலித் பெண் ஒருவர் மேயராவது 340 ஆண்டுகால சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவே முதல் முறை.
இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்பதால் அவரை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.