தமிழ்நாடு என்பது இரண்டு சொற்கள் மட்டுமில்லை – இராகுல்காந்தி உரை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 23 ஆவது வயது வரையிலான வாழ்க்கையை உங்களில் ஒருவன் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். அந்நூல் வெளியீடு பிப்ரவரி 28 அன்று சென்னையில் நடைபெற்றது.

அந்நிகழ்வில், காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல்காந்தி ஆற்றிய உரை….

மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களே, துரைமுருகன் அவர்களே, டி.ஆர்.பாலு அவர்களே, கனிமொழி அவர்களே, பினராயி விஜயன் அவர்களே, உமர் அப்துல்லா அவர்களே, ஓவைசி அவர்களே, வைரமுத்து அவர்களே, சத்யராஜ் அவர்களே, நண்பர்களே, சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஓர் அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக நான், என்னுடைய அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்ட விரும்புகின்றேன். அவருடைய வாழ்க்கை என்பது நீண்ட நெடிய போராட்டம் நிறைந்ததாகும். பல ஆண்டுகள் அந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டபொழுது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்து வருவதற்காக நான் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நேற்றைய தினம் என்னுடைய தாயார் என்னை அழைத்து, நாளை மறுதினம் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்த நாள் என்று சொன்னார்கள்.

எனக்குத் தெரியும் என்று நான் சொல்லிவிட்டு, அவருக்கு எத்தனை வயது தெரியுமா? என்று கேட்டேன்.

தெரியாது என்று என்னுடைய தாயார் சொன்னார்.

69 வயது என்று நான் சொன்னவுடன்,

சாத்தியமே இல்லை என்று என்னுடைய தாயார் சொன்னார்.

நான் என்னுடைய தாயாரிடம் கேட்டேன், அவருக்கு எத்தனை வயது இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்றேன்.

50 அல்லது 60 வயதிற்குள்தான் இருக்கும் என்று என்னிடம் அவர் சொன்னார்.

நான் அப்படி சொன்னவுடன் என்னுடைய தாயார் அவர்கள், கூகுளிடம் அந்த செய்தியை ஒப்பிட்டுப் பார்த்து, ஆம், நீ சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டார்.

நான் சொல்லப் போகின்ற செய்தி இந்தப் புத்தகத்தில் இருக்கிறதா? இல்லையா? எனக்குத் தெரியாது. ஆனால், அவர் இன்னொரு புத்தகத்தை எழுதவேண்டும்; அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதைப்பற்றி.

நான், திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு தந்தமைக்காக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சிதரக்கூடிய ஒன்றாகும்.

நான் அதை மேலோட்டமாகச் சொல்லவில்லை; என்னுடைய அடிமனதிலிருந்து ஆழமான உணர்வோடுதான் அதைச் சொல்லுகிறேன்.

சில நாள்களுக்கு முன்பு நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து, தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பாராட்டியதாக நான் அறிந்தேன்.

நாடாளுமன்றத்தில் இருந்து நான் வெளியே வந்தபொழுது, பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒருவர் என்னிடம் கேட்டார், உங்களுடைய உரையில் என்ன காரணத்திற்காக நீங்கள் தமிழ்நாட்டைப்பற்றி அதிகளவில் குறிப்பிட்டீர்கள் என்று கேட்டார்.

நான் பலமுறை அதனை உணர்ந்திருக்கின்றேன். தமிழ்நாட்டின்மீது எந்த அளவிற்கு எனக்கு அன்பு இருக்கிறது என்று.

நாடாளுமன்றத்திலிருந்து நான் வெளியே வருகிறபொழுது, நான் தமிழன் என்று சொன்னேன்; என்னை அறியாமல் அந்த வார்த்தை வந்தது.

நான் என்னுடைய காரில் ஏறியதற்குப் பிறகு, ஏன் அப்படி சொன்னேன்? என்று யோசித்தேன்.

ஏன் அந்த வார்த்தைகள் என்னுடைய வாயிலிருந்து வந்தன?

நீங்கள் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை –
நீங்கள் தமிழ் மொழியை பேசுவதில்லை –
மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான நாகரிகம் உடைய மொழி தமிழ்மொழி.
அந்த நாகரிகத்தைப்பற்றி இன்னும் நீங்கள் தெரிந்துகொள்ளக்கூட முற்படவில்லை.

ஆனால், எப்படி நீங்கள் தமிழன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள் என்று எனக்குள் நானே கேட்டுக்கொள்கிறேன்.
நான் எப்படி அந்த உரிமையை, அப்படி சொல்லுகின்ற அளவிற்கு எடுத்துக்கொண்டேன்.
நான் காரில் செல்லுகின்றபொழுது, மீண்டும் தொடர்ந்து அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
பின்னர்தான் நான் உணர்ந்தேன், ஏன் அந்த வார்த்தையை நான் சொன்னேன் என்று.
ஏனென்றால், என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது.

ஒரு தந்தையை இழப்பது என்பது, குறிப்பாக எனக்கு மிகப்பெரிய வேதனையான, சோகமான அனுபவம்தான்.
நான் அந்த சோகமான அனுபவத்தைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்கிறேன்.

அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன்; என்னை தமிழன் என்று அழைத்துக் கொள்ளவதற்கான எல்லா உரிமைகளும் எனக்கு இருப்பதாக.

தமிழனாக இருப்பதின் பொருள் என்ன?

நான் முதலில் இந்த மண்ணுக்கு வருகிறபொழுது, பணிவான குணத்தோடு இருந்து வருகிறேன்.
உங்களுடைய வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறவனாகவே இருந்து வருகின்றேன்.
உங்களுடைய எல்லாவிதமான பரிமாணங்களையும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் நான் ஒவ்வொரு முறையும் வருகிறேன்.

நான் என்னுடைய நாடாளுமன்ற உரையில் பேசுகின்றபொழுது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டேன்.

நான் மாநிலங்கள் என்று சொல்கிறேன் என்றால், அந்த சொல் எங்கிருந்து வந்தது? ஒரு மாநிலம் என்றால் என்ன?
மண்ணைப் பற்றியது – மக்களிடமிருந்து அந்த மண்ணினுடைய தன்மையை அறிவது – மக்களிடமிருந்து அவர்களுடைய குரல் வெளிவருவது – அவர்களுடைய குரலிலிருந்து அவர்களுடைய மொழி வெளிவருகின்றது – மொழியிலிருந்து கலாச்சாரம் வருகின்றது – கலாச்சாரத்திலிருந்து சரித்திரம் வருகின்றது – பின்னர் வரலாற்றிலிருந்து மாநிலம் உருவாகுகின்றது.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொல்கின்றபொழுது, மாநிலங்களிலிருந்துதான் இந்தியா என்பதே வருகின்றது என்பதை நான் அழுத்தமாகச் சொன்னேன்.

எழுத்துகள் சேர்ந்து சொல்லாக மாறுகின்றது; வார்த்தைகள் சேர்ந்து வாக்கியமாக மாறுகிறது; வாக்கியங்கள் ஒன்று சேர்ந்து கவிதையாக மாறுகின்றன.

எழுத்துகளை மதிக்கவில்லை என்றால், சொற்களை மதிக்கவில்லை என்றால், வாக்கியத்தை மதிக்கவில்லை என்றால், வேறு எதையும் மதிக்க முடியாது.

பிரதமர் இங்கு வருகிறபொழுதெல்லாம் பொருள் புரியாமல், தமிழ்நாட்டைப்பற்றி பேசுகிறார்.தமிழ்நாடு என்பது இரண்டு சொற்கள் மட்டுமில்லை. அது மூவாயிரம் ஆண்டுகள் பழைமையுள்ள ஒரு பாரம்பரியமான நாடு.

அவர் சொற்களைப் புரிந்துகொள்வதில்லை –
வாக்கியங்களைப் புரிந்துகொள்வதில்லை –
மொழியைப் புரிந்துகொள்வதில்லை –
பிறகு எந்த அடிப்படையில் அவர் தமிழ்நாட்டைப்பற்றி பேசுகிறார்?

அவருடைய குரலைப் புரிந்துகொள்ள முடியாமல், நான் உங்களுக்காகப் பேசுகிறேன் என்று அவர் எப்படி சொல்ல முடியும்?

அவர்கள் திருப்பித் திருப்பிக் கேட்கின்ற எதையுமே நீங்கள் உணர்ந்துகொள்ளாமல் நீங்கள் பேசுகிறபொழுது, அவர்கள்மீது என்ன மரியாதை வைத்திருக்கிறீர்கள்?

தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக ஜி.எஸ்.டி. என்பது நியாயமற்றது – அது எங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ளாமல், நீங்கள் அவர்களை அவமதிக்கிறீர்கள்.

நான் நாடாளுமன்றத்தில் பேசுகிறபொழுது சொன்னேன்; அவர்கள் தமிழ்நாட்டினுடைய வரலாற்றைப்பற்றியும் தெரிந்துகொள்வதில்லை; இந்த நாட்டினுடைய வரலாற்றைப்பற்றியும் புரிந்துகொள்ளவில்லை.
பிறகு, மூவாயிரம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின்மீது யாராலும், எதையும் திணிக்க முடிந்ததில்லை.
மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இன்றுவரை யாராலும், எதையும் தமிழ்நாட்டின்மீது திணிக்க முடியவில்லை.

ஆனால், எனக்குத் தமிழ்நாட்டு மக்களைப்பற்றிய அனுபவம் இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களோடு அன்போடும், அக்கறையோடும் பேசினால், அவர்களிடமிருந்து எதையும் பெறலாம்.

நீங்கள் இங்கே வாருங்கள், இங்கே வந்து தமிழர்களுடைய கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை, மொழியைப்பற்றிப் புரிந்துகொள்ளுங்கள் – அவர்கள் அதற்குப் பதிலாக அன்பையும், பரிவையும் உங்கள்மீது வாரி வழங்குவார்கள்.
பிரதமரிடம் இருப்பது சரியாக புரிந்துகொள்ளாத ஒரு தன்மை.

கிட்டத்தட்ட இந்த நாட்டில் இருக்கின்ற எல்லா மாநிலங்களைப்பற்றியும் அவர் இப்படித்தான் புரிந்துகொள்ளாத ஒரு தன்மையில் இருக்கிறார்.

என்னுடைய நண்பரும், சகாவுமான உமர் அப்துல்லா மிகச் சிறப்பாக உரையாற்றினார். மிக முக்கியமாக, எதைச் சொல்லவேண்டுமோ, அவர் அதை இந்த மன்றத்தில் சொன்னார்.

அதுகுறித்து நான் சொல்ல விரும்புகிறேன்.

நாடு விடுதலை பெற்றதிலிருந்து இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு மாநிலத்திலிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன்பு எப்பொழுதும் இப்படி நடந்ததில்லை.

அந்த மக்களுடைய உரிமைகள், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு இருக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மக்கள், தங்களைத் தாங்களே ஆள முடியாத ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது.

குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற பகுதியிலிருக்கின்ற அதிகாரிகள், இப்பொழுது ஜம்மு காஷ்மீரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

இது ஜம்மு காஷ்மீருக்கு அவர்கள் அளித்திருக்கின்ற மிகப்பெரிய அநீதியாகும்.

பஞ்சாபில் இருக்கின்ற நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை எடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் அவர்களே கொடுத்திருக்கிறார்கள்.
யாரிடமும், எதைப்பற்றியும் கலந்து பேசவில்லை.

அதையேதான் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் செய்கிறார்கள்.

நாம் வேற்றுமையில் ஒற்றுமையைப்பற்றி மிகச் சிறப்பாக பேசுகிறோம்.

இந்தியா என்கின்ற இந்த நாடு பல்வேறு மொழிகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும் கொண்ட நாடாகும்.
வரலாற்று ரீதியாக இந்த வேற்றுமையின் காரணமாக, இந்தியாவிற்குப் பல அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது.
இது இந்தியாவினுடைய பலம்.

அதைத் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்நாடு, உத்தரப்பிரதேசத்து மக்களிடமிருந்து கற்றுக்கொள்கிறது.
தமிழ்நாடு, மகாராட்டிர மக்களிடமிருந்து கற்றுக்கொள்கிறது.
ஒவ்வொரு மாநில மக்களிடமிருந்தும், இன்னொரு மாநில மக்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

ஒருவரை மற்றொருவர் மதிக்கின்றோம்.

எங்களுடைய ஒட்டுமொத்தமான கருத்து வேற்றுமையில் ஒற்றுமை.
நான் சொல்வதும் இதுதான் – ஒரு உறுதியான வகையில்தான் இந்த ஒற்றுமையை நிலை நிறுத்த முடியும்.
நாங்கள் எதைச் சொல்கிறோமோ, அதைத்தான் நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும்.

யார் அந்த உரிமையைத் தருவது?

நீங்கள் யார், இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு?

ஏன் இந்திய நாட்டு மக்கள் – இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கக் கூடாது?
உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது?

இதுதான் இன்றைக்கு இருக்கின்ற முக்கியமான – மய்யப் பிரச்சினையாகும் இந்த நாட்டைப் பொறுத்தவரையில்.
நம்முடைய அமைப்பு, மக்களுடைய குரல்தான் எதிரொலிக்கவேண்டும்.

ஆனால், தொடர்ச்சியாகத் திட்டமிட்டு, மக்களுடைய உரிமைகளும், உணர்வுகள் நசுக்கப்படுகின்றன.
நீதித்துறை, தேர்தல் ஆணையம், பத்திரிகை துறை ஆகியவை எல்லாம் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன.

பாரதீய ஜனதா, எந்தக் கற்பனையான உலகத்திலும் வாழவேண்டும்; அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும்.

ஏனென்றால், அவர்கள் வரலாற்றை எதிர்த்துப் போரிடுகிறார்கள் –
அவர்கள் பாரம்பரியத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் – அது அவர்களால் முடியாது – தோற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்.

மீண்டும் ஒருமுறை உங்கள் முன்னால் வந்து பேசுவதற்கு, நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். மதிப்பிருப்பதாக நான் உணர்கிறேன்.

திரு.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் அவரைக் கவனித்தேன், முன்பே விட அவர் இன்னும் இளமையாகத் தோற்றமளிக்கின்றார்.
அதனால் அவர், நாளைக்கு அவர் பிறந்த நாள் கேக்கை நன்றாகவே சாப்பிடவேண்டும்.

நன்றி,
வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave a Response