
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அலுவலக வளாகத்தில் நின்றிருந்த முதியவர் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்த விஷத்தை எடுத்து குடிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் துணை காவல்கண்காணிப்பாளர் சம்பத் மற்றும் காவல்துறையினர் அவர் விஷம் ஊற்றி வைத்திருந்த பாட்டிலை பிடுங்கினார்கள்.
பின்னர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-
எனது பெயர் செல்வராஜ் (வயது 60). எனக்கு 17 வயது இருக்கும்போது இலங்கையில் இருந்து வெளியேறி, அகதியாக ஈரோடு சின்னசேமூரில் குடியேறினேன். தற்போது எனக்கு திருமணமாகி 4 மகன்கள் உள்ளனர். நான் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தேன். வயது முதிர்வு காரணமாக தற்போது வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் வாடகை கொடுத்து குடும்பம் நடத்த மிகவும் சிரமாக உள்ளது.
கருணை அடிப்படையில் எனக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக மனு கொடுத்து வந்தேன். அதைத்தொடர்ந்து சென்னிமலை பகுதியில் அரசு சார்பில் எனக்கு வீடு ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறினார்கள். ஆனால் அதற்கான உத்தரவை வழங்கவில்லை. இதுகுறித்து நான் பலமுறை அதிகாரிகளிடம் கேட்டபோதும் எனக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அதனால் விரக்தி அடைந்த நான் இன்று (நேற்று) கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். அதற்காகத்தான் வீட்டில் இருந்து விஷத்தை எடுத்து வந்து இங்கு குடிக்க முயன்றேன்“ என்றார்.
அப்போது போலீசார் இலங்கை அகதி செல்வராஜுடம் அறிவுரைகூறி கலெக்டரிடம் மனு கொடுக்க சொன்னார்கள். போலீசாரின் அறிவுரையை கேட்ட செல்வராஜ் கலெக்டர் பிரபாகரிடம் சென்று தனது கோரிக்கை மனுவை கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து செல்வராஜ் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.


