பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கூசாமல் கூட்டிக் கொண்டேபோகிறது. இதன்மூலம் நாட்டில் விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசலின் விலை 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01 ஆகவும், டீசல் ரூ.98.92ஆகவும் உள்ளது. இதுவே தில்லியில் பெட்ரோல் ரூ.105.84 ஆகவும், மும்பையில் பெட்ரோல் ரூ.111.77 ஆகவும் உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துவிட்ட நிலையில், இப்போது டீசலும் பல்வேறு மாநிலங்களில் ரூ.100-ஐ கடந்து உயர்ந்து வருகிறது.
தில்லியில் விமானத்துக்கான எரிபொருள் ஒரு லிட்டர் ரூ.79 ஆக உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. இதன் மூலம் விமானத்தை இயக்குவதைவிட இருசக்கர வாகனத்தை இயக்கு வதற்கான செலவு அதிகரித்துள்ளது என்பது பொதுமக்களைக் கோபம்கொள்ள வைப்பதாக உள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.117.86 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.105.95 ஆகவும் உயர்ந்து உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை ஒரு பீப்பாய் 84.8 டாலராக உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு இதுவே 73.51 டாலராக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை குறைந்த போதும், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை. இதுதான் உண்மையான காரணம்.
இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசு மிரட்டி வரி பறிக்கிறது, இந்த விவகாரம் ஒரு முக்கிய பிரச்சினை.மோடியின் நண்பர்களின் நலனுக்காக ஏமாற்றப்படும் மக்களுடன் தான் இருக்கிறேன், தொடர்ந்து குரல் எழுப்புவேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சாமானிய மக்களை இந்த அளவு வதைக்கும் மோடி விளங்கவே மாட்டார் என்று வெகுமக்கள் சாபம் விடுகின்றனர் என்று பெட்ரோல் பங்குகளில் வேலை செய்பவர்கள் சொல்கிறார்கள்.