தமிழக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் நன்றியும் கோரிக்கையும்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கையின் போது,பத்திரிகையாளர் நல வாரியம் உட்பட பல அறிவிப்புகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார்.

அந்த அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது சென்னை பத்திரிகையாளர் சங்கம்.

அவ்வமைப்பின் செயலாளர் எல்.ஆர்.சங்கரும் பொருளாளர் வி.மணிமாறனும் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்……

செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு அரசு உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுடன், உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அளிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

பணிக்காலத்தில் உயிரிழக்க நேரும் பத்திரிகையாளர்களின் குடும்ப உதவி நிதியாக வழங்கப் படும் மூன்று லட்சம் ரூபாய், ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் வலியுறுத்தி வந்த இந்தக் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிதியை வழங்கும்போது, பணிபுரிந்த காலத்திற்கேற்ப நிதியுதவியை மாற்றி அமைக்காமல் முழுமை யாக வழங்கப்பட வேண்டும். பத்திரிகை வடிவமைப்பாளர் உள்ளிட்ட உழைக்கும் பத்திரிகையாளர் என்ற சட்ட விதிக்குள் வரும் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக் காகவும் பங்காற்றி வரும் சிறந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் வரவேற்கிறது. இதழியல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குவோரை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருது வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் யூனியன் கேட்டுக்கொள்கிறது.

ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான வரம்பு அதிகரிக்கப்படுவதுடன், ஓய்வூதியம் பெறுவதற்கான முறைகள் எளிமையாக்கப்பட வேண்டும் என சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் நீண்டநாள்களாக வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையையும் நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றுமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response