
மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவனை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருக்கிறது தமிழக அரசு.
தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கான பாடல்கள் மூலமாக ஆந்திராவை கலக்கியவர், நக்சலைட் பாடகர் கத்தார். அவரைப்போலவே, மக்கள் பிரச்னைகளை முன்வைத்து ம.க.இ.க. மேடைகளில் பாடல்களைப் பாடி வருபவர் திருச்சியைச் சேர்ந்த கோவன். சாதியக் கொடுமைகள், போலீஸ் அடக்குமுறைகள், தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளை, மணல்கொள்ளை, கனிமவளக்கொள்ளை உட்பட பல சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்பு உணர்வுப் பாடல்களை உணர்ச்சிகரமாகப் பாடிவருபவர் இவர்.
கோவனின் மனைவி ஜெயலட்சுமி, “என்னோட கணவர், தான் ஏத்துக்கிட்ட கொள்கைக்காக வேலையை விட்டுவிட்டு முழுநேர இயக்க வேலைக்கு வந்துட்டாரு. சில வருஷங்களுக்குப் பிறகு, டிப்ளமோ ஹோமியோபதி படிச்சி முடிச்சாங்க. போராட்டம், மக்கள் பணி எனப் போகும் வழியில், உடம்பு சரியில்லைனு யாராவது வந்தால் அவங்களுக்கு மருந்துகொடுப்பாரு. அப்படித்தான் முந்தினநாள் அம்மா ஒருத்தர் நெஞ்சு வலின்னு நடுராத்தி வந்து கதவை தட்டினாங்க. அவங்களுக்கு முதலுதவி செஞ்சு, மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சாரு.
அதுக்கப்புறம் நடுராத்திரி கதவு தட்டுற சத்தம் கேட்டு, அந்த அம்மாவா இருக்கும்னு நெனச்சு கதவைத் திறந்தாரு. அப்போ, வீட்டை சுத்தி போலீஸ் நின்னாங்க. அதுல ஒருத்தர் மட்டும் சீருடையில் இருந்தார். ‘உங்களை விசாரிக்கணும். உறையூர் ஸ்டேஷனுக்கு வாங்கன்னு கூப்பிட்டாங்க. சட்டை போட்டுக்கிட்டு வர்றேன்னு திரும்பினாரு. ‘அதெல்லாம் முடியாது’னு சொல்லி பின்னங்கழுத்துல இறுக்கிப் பிடிச்சி தள்ளிக்கிட்டுப் போய், வண்டியில ஏத்தினாங்க. கட்டியிருந்த கைலியோடு கூட்டிக்கிட்டுப் போனாங்க. உறையூர் கொண்டு போறோம், அங்க வாங்கன்னு எங்ககிட்ட சொல்லிட்டுப் போனாங்க. உடனே ஸ்டேஷன்ல போய்ப் பார்த்தோம். அப்படி யாரும் கைதுசெய்யப்படலைன்னு அங்க சொல்லிட்டாங்க.
காலை 10 மணி வரைக்கும் ஸ்டேஷன் வாசல்லயே கிடந்தோம். என் கணவரை எங்கே வெச்சிருக்காங்கனே தெரியல. அப்புறம், உறையூர் எஸ்.ஐ முத்துசாமி அந்தக் கூட்டத்துல இருந்தார்னு தெரியவந்துச்சு. அவருக்கு போன் பண்ணி கேட்டோம். ‘மேலதிகாரிங்க போகச் சொன்னாங்க. அதனால வந்தேன். அதுக்குமேல எதுவும் சொல்ல முடியாது’னு அவர் சொல்லிட்டார்.
அவரைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில்தான், ஸ்டேஷனை முற்றுகையிடப் போனோம். அப்பத்தான், சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் மெல்வின் என்பவர் போன் பண்ணி, ‘நாங்கதான் அவரை கைது பண்ணியிருக்கிறோம். அவரை சென்னைக்கு அழைச்சிட்டுப் போறோம். சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தால் அவரை பார்க்கலாம்’னு சொன்னார். ஆனாலும், அவரை எங்கள் அமைப்பு தோழர்களால்கூட சந்திக்க முடியலை. எதுக்கு இவ்வளவு நெருக்கடி?
அவரை கைதுசெய்கிறோம்னு சொன்னால், நானே அனுப்பி வெச்சிருப்பேன். நடுராத்திரியில ஒரு தீவிரவாதியைப்போல அவரை கைதுசெஞ்சுருக்காங்க. டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடினால் இதுதான் நிலைமைனு அச்சுறுத்துறதுக்காக இப்படி செஞ்சிருக்காங்க.
என் கணவர் என்ன தப்பு செஞ்சுட்டார்? ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லை புள்ளைக்குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கிலாமா?’ என்ற பாடலை விடவா கலாசாரத்தைச் சீரழிக்கிற பாடலை அவர் எழுதிட்டார்? மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க மக்கள் படும் சிரமங்களை பாடல்களாக எழுதிப் பாடுனதுக்கு, டாஸ்மாக்கை மூடச் சொன்னதுக்கு தேசத் துரோக வழக்கா?
இதுதான் அவர் செஞ்ச குற்றம்னு சொன்னா, அவர் இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வார். அவரோட சேர்ந்து நாங்களும் பாடுவோம். நாங்கள் பாடுறதை யாராலும் தடுக்க முடியாது. எங்களுக்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது. பூட்டுப்போடணும்னு ஆசைப்பட்டா, தமிழக அரசு முதல்ல டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடட்டும்” என்றார் ஆக்ரோஷமாக.


