தொடங்கியது இந்திய ஒன்றியத்தின் நலன் காக்கும் போர்

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்றன. விவாதத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புக் கொள்ளாததால், மழைக்கால தொடர் முழுவதும் முடங்கியது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, தினசரி கூட்டம் தொடங்கும் முன்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி அவையில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.அது நல்ல பலனைக் கொடுத்தது. பாஜக அரசு பதறியது.

இதன் தொடர்ச்சியாக, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பொதுவான வியூகங்களை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக காங்கிரசுக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் நேற்று நடந்தது.

இதில்,சோனியா காந்தி (காங்கிரசு), தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (திமுக தலைவர்), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரசு), சரத் பவார் (தேசியவாத காங்கிரசு), உத்தவ் தாக்கரே (சிவசேனா), ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா (தேசிய மாநாடு கட்சி), மெகபூபா முப்தி (பிடிபி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), சரத் யாதவ் (லோக்தன்ரிக் ஜனதா தளம்) ஆகிய தலைவர்களும் மற்றும் ஆர்ஜேடி, ஏஐயுடிஎப், விடுதலை சிறுத்தைகள், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆர்எல்டி, ஆர்எஸ்பி, கேரள காங்கிரஸ் (மானி), ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது…..

இந்தியா 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு தீர்மானத்தை உறுதிபடுத்துவதற்கான சரியான நேரம் இது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தினந்தோறும் நமது உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி ஒன்றுபட்டு செயல்பட்டனர். அந்த ஒற்றுமை, எதிர்கால கூட்டத் தொடரிலும் தொடரும் என நம்புகிறேன்.

அதே சமயம், நாம் நாடாளுமன்றத்திற்கு வெளியே மிகப்பெரிய அளவில் போராட வேண்டி உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்காக நாம் இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும். நாம் அனைவரும் முறையாகத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். நமக்கு வேறு வழியில்லை. நமக்கென பல்வேறு நிர்பந்தங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் தாண்டி, தேசத்தின் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து மேலே எழ வேண்டும்.

2024 தேர்தலில் வெற்றி பெறுவதே நமது ஒரே இலக்கு. நமது நாட்டின் சுதந்திரத்தை, அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒரு அரசை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். ஒன்றுபட்டு ஒரே சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இது நமக்கு மிகப்பெரிய சவால்தான். ஆனாலும் நம்மால் முடியும். ஒன்றுபட்டு உழைப்பதை தவிர நமக்கு வேறுவழியில்லை. இவ்வாறு சோனியா பேசினார்.

இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து, பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து அடுத்த மாதம் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்துவது என கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் இந்த ஒருங்கிணைவு இந்திய ஒன்றியத்தின் நலன் காக்கும் போர் என்ர்று வர்ணிக்கப்படுகிறது.

Leave a Response