கனடா அரசாங்கமே அமைக்கும் தமிழ்ச் சமூக மையம் – நன்றி தெரிவித்து சீமான் கடிதம்

‘தமிழ்ச் சமூக மையம்’ அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும், ஒன்டாரியோ மாநில அரசிற்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நன்றி தெரிவித்து சீமான் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது……,

கனடா நாட்டின் ஒன்டாரியோ மாநிலத்தில் “தமிழ்ச் சமூக மையம்” அமைப்பதற்காகக் கனடா ஒன்றிய அரசும், ஒன்டாரியோ மாநில அரசும் இணைந்து 26.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளித்திருப்பது உள்ளபடியே நெஞ்சை பேருவகைக் கொள்ளச் செய்திருக்கிறது.

தன்னை நாடிவந்த தமிழ் மக்களை அள்ளி அரவணைத்து ஆதரித்ததோடு, அவர்களின் கடந்த காலத் துயர்மிகுந்த காயங்களை ஆற்றி இன்னொரு தாய்மடியாகவே திகழ்கிறது கனடா நாடு. அதேபோல் தங்களை வாழ்வித்த கனடா நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அயராது உழைத்தவர்கள் தமிழ் மக்கள். அப்படி உண்மையும் நேர்மையுமாக நாற்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக அரும்பாடுபட்ட தமிழ் இனத்தைச் சிறப்பிக்கும் வகையிலேயே கனடா தேசம், இத்தகைய சிறப்புமிக்க ‘தமிழ்ச் சமூக மையத்தை’ அமைப்பதற்கு முன்வந்திருப்பதாகக் கருதுகிறேன்.

புதிதாக அமையவிருக்கும் தமிழ் சமூக மையத்தில் பல்நோக்கு வசதிகொண்ட அருங்காட்சியகம், கலையரங்கம், வெளிவிளையாட்டரங்கம், நூலகம், பண்பாட்டுக் கூடம், மனநலசேவைகள், முதியோருக்கான மகிழ்விடம், மற்றும் பலகல்வி பொழுதுபோக்கு இடங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருப்பது மேலும் சிறப்புடையதாகும்.

தமிழர் பண்பாட்டு மாதம் மற்றும் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் எனத் தமிழர்களின் மொழி, கலை, இலக்கிய, பண்பாடு மற்றும் தாயக விடுதலைப் போராட்டத்தைப் போற்றும் வகையில் கனடா நாட்டு அரசும், ஒன்டாரியோ மாநில அரசும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் பல்வேறு சிறப்புமிக்க நடவடிக்கைகளில் மற்றுமொரு மைல்கல்லாக, தற்போது அமையவிருக்கும் தமிழ்ச் சமூக மையம் திகழும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

புலம்பெயர்ந்து வந்தபோதிலும், கனடா மண்ணின் அரசியலோடு இயைந்து வாழும் அனைத்து குடிமக்களையும் சமமாகக் கருதி அவர்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றித் தருவதோடு மட்டுமல்லாமல், தன் நாட்டில் வாழும் தனித்த தேசிய இனங்களின் பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிப்பாதுகாக்க முன்வந்திருக்கும் கனடா நாட்டு அரசின் உயரிய நோக்கம் என்றும் பாராட்டுக்குரியது.

இத்தகைய பெருமைமிகு தமிழ்ச் சமூக மையத்தை அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும், ஒன்டாரியோ மாநில அரசிற்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதோடு, தமிழ்ச் சமூக மையம் அமைவதற்கு முயற்சியெடுத்த ஒவ்வொரு தமிழ் உறவுகளுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response