ஆயிரம் கோடி ஊழல் – முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது புகார்

அ.தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத்துறையில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது குறித்து இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுகா மானாவாரி மற்றும் இறவை பாசனதாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் அப்துல்லா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குநராக 2016 முதல் 2021 வரை தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ் என்பவர் பணியாற்றினார். இவர், வேளாண்துறை முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமானவர்.

விவசாயிகளிடம் இருந்து விதை கொள்முதல் செய்ததாகப் போலிப் பட்டியல் தயாரித்து மோசடி செய்துள்ளனர். தாமோதரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துரைக்கண்ணு ஆகியோர் வேளாண்மைத்துறை அமைச்சர்களாக இருந்த காலத்தில் பயோ பூச்சிகொல்லி மற்றும் பயோ உரம் உள்ளிட்டவை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கான உரிமம் விதிகளை மீறி வழங்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த உரம் விற்பனையில் அதிகளவு இலஞ்சம் கைமாறியுள்ளது.

ஆத்மா திட்டத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசனத்திற்கான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உணவு வழங்குவதிலும் பெரும் முறைகேடு நடந்துள்ளது. ரூ.60 மதிப்புள்ள உணவை ரூ.100க்கு வாங்கியுள்ளனர். இந்த முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஒழிப்புத்துறையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி தட்சிணாமூர்த்திக்கு எதிராக ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் இன்னும் நிலுவையில் உள்ளது. இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் இல்லை.

இதேபோல் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்களில் இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பலரும் இணைந்து முறைகேட்டிலும், ஊழலிலும் ஈடுபட்டுள்ளனர். நுண் உரம், ஜிங் சல்பேட் மற்றும் தானிய விதைகள் மானியத்தில் வழங்கும் திட்டத்திலும் கடந்த 2016-2021 வரை பெரும் முறைகேடு நடந்துள்ளது. இதற்கான டெண்டர்களில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. அதிகாரிகள் பணி நீட்டிப்பிலும் தவறு நடந்துள்ளது. குறுவை காலத் திட்ட டெண்டரில் பினாமி நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. தனிநபர்களுக்கு டிராக்டர் வழங்கும் திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது. தரம் குறைந்த உரம் வழங்கியது தொடர்பாகவும் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டது.

விவசாயிகள், விவசாய விளைபொருட்கள், கொள்முதல் உள்ளிட்ட விபரங்களைச் சேமித்து வைப்பதற்காக டேப்லெட்கள் வாங்கப்பட்டன. ஐ.எஸ்.ஐ முத்திரையில்லாத, தரம் குறைந்த டேப்லெட்கள் மற்றும் கணினி பொருட்கள் வாங்கப்பட்டன. தரம் குறைந்த சீனத் தயாரிப்புகளை வாங்கி பெருமளவு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த டேப்லெட் மற்றும் கணினிக்கள் பெரும்பாலும் உபயோகமற்ற நிலையில் உள்ளன.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி முந்தைய அ.தி.மு.க அரசிற்கு ஆதரவாக புயல் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013 இல் இருந்து வேளாண்மைத்துறை முன்னாள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக போலி ஆவணங்கள் உருவாக்கியுள்ளனர்.

குறிப்பாக சொட்டுநீர்ப் பாசன கருவிகள் வாங்கியது, இயந்திர கொள்முதல், விதை கொள்முதல், பிகோ கேமரா கொள்முதல், டேப்லெட் மற்றும் கணினி பொருட்கள் வாங்கியது, நீர்வடி மற்றும் நில மேம்பாட்டுத் திட்டம், ஆத்மா திட்டம், நீர்ப்பாசனத் திட்டம், உள் கொள்முதல்திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழு திட்டம், டெல்டா மாவட்ட குறுவை மற்றும் சம்பா குழு திட்டம், விதை கொள்முதல் திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவற்றில் அதிகளவு முறைகேடு நடந்துள்ளது.

எனவே, இந்த மோசடி மற்றும் முறைகேடு தொடர்பாக விசாரித்து தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்

எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனுவில் தொடர்புள்ள அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்த்து மனு செய்யுமாறு கூறி விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இது அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response