அதிமுக கவுண்டர் கட்சி ஆகிவிட்டதா? – சசிகலா பேச்சால் பரபரப்பு

அதிமுக தொண்டர்களிடம் சசிகலா தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி வருகிறார். அதன்படி, திருநெல்வேலியைச் சேர்ந்த பாரதி, திருப்பூரைச் சேர்ந்த காத்தவராயன், தேனியைச் சேர்ந்த சிவநேசன் ஆகியோரிடம் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று என்னிடம் கூறியதால்தான் அரசியலிருந்து ஒதுங்கி இருந்தேன். ஆனால், தற்போது தொண்டர்கள் அனைவரும் என்னிடம் அழுது கொண்டே, நீங்கள் கட்சித் தலைமையை ஏற்கவேண்டும் என்று கூறுகின்றனர்.

அதிமுக எப்போதும் சாதிரீதியான கட்சியாக இருந்ததில்லை. ஆனால், தற்போது ஒரு சாதிசார்ந்து அதிமுக வழி நடத்தப்படுகிறது. ஒருசிலரின் சுயலாபத்துக்காக, என்னிடம் பேசிய கட்சிதொண்டர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு தொண்டர்களை நீக்குவது வருத்தமாக உள்ளது.

இந்த நிலைமையில் கட்சியை சரி செய்து மீண்டும் நல்லபடியாகக் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் நம்பியவர்கள் என் முதுகில் குத்தி குத்தி, தற்போது குத்துவதற்கு இடமில்லாமல் போய்விட்டது. அதை தற்போது தொண்டர்கள் சரிசெய்து வருகிறார்கள். எனக்கென்று இனி எதுவுமில்லை. தொண்டர்களுடனே கடைசி வரை இருந்துவிட்டுப் போகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானதால் அவர் சார்ந்த கவுண்டர் சாதி ஆதிக்கத்துக்குள் அதிமுக சிக்கிக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

அதிமுக தற்போது ஒரு சாதிசார்ந்து வழிநடத்தப்படுகிறது என்று சசிகலா பேசியிருப்பது கவுண்டர் சாதி ஆதிக்கம் என்கிற குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிற மாதிரி அமைந்துள்ளது என்கிறார்கள்.

Leave a Response