பெண்களும் அர்ச்சகர் அறிவிப்பு புரட்சிகரமானது – பெருகும் வரவேற்பு

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை புதுப்பொலிவோடு மேம்படுத்தவும், கோயில்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், கோயில் ஆணையர்களுடன் சென்னையில் ஜூன் 12 அன்று ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழில் அர்ச்சனை செய்வதற்குண்டான பயிற்சியை அனைத்து அர்ச்சகர்களுக்கும் தந்திருக்கின்றனர். திருக்கோயில்களில் ஏற்கெனவே தமிழில் அர்ச்சனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தற்போது அனைத்து திருக்கோயில்களிலும் குறிப்பாக, முக்கியமான 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பதாகையை கோயில்களில் வைக்கவுள்ளோம். தமிழில் அர்ச்சனை செய்யவுள்ள அர்ச்சகர்களின் பெயர்கள், கைபேசி எண்களும் அதில் இடம்பெறும்.

பெண்கள் அர்ச்சகர் பயிற்சி எடுக்க விரும்பினால், அவர்களுக்கும் பயிற்சி அளித்து அர்ச்சகராக்குவதற்கு உண்டான முயற்சியை முதல்வர் அனுமதியுடன் மேற்கொள்வோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பயிற்சி தந்து அர்ச்சகர் பணியில் ஈடுபடுத்த முடிவு எடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது.

இதழாளர் தீபாஜானகிராமன் இதுகுறித்து எழுதியிருப்பதாவது….

பெண்களும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரலாற்று முக்கியமானது. இது திகைப்புக்குள்ளாக்கும், சாத்தியமற்றதாகத் தோன்றும். ஆனால் பெண்கள் அர்ச்சகராகக் கூடாது என்கிற கேள்விக்கு இதை எதிர்ப்பவர்கள் ஒருவரிடம் கூட உருப்படியான பதில் இருக்கப்போவதில்லை.

சமஸ்கிருதத்தின் சில உச்சரிப்புகள் பெண்கள் உடலில் தீங்கு ஏற்படுத்தும் என்பதை ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். ஒரு வாதத்திற்கு அப்படியே வைத்துக் கொண்டாலும், தமிழில் மந்திரங்களும், அர்ச்சனைகளும் செய்யலாம் என்பது நடைமுறையில் உள்ளது. தமிழில் உச்சரிப்பு ஒவ்வாமை இல்லை. இதோடு மொழியை அதன் சரியான வேர்ச்சொல், உச்சரிப்போடு புழக்கத்தில் இன்னமும் வைத்திருப்பவர்கள் பெண்கள் என்பதால் அவர்களால் எந்த மொழியையும் பயிற்சியில் கற்றுக் கொள்ள முடியும்.

மாதவிடாய் காலங்களில் கோயில் கருவறைக்குள் எப்படி போவார்கள் என்பது அடுத்த கேள்வி..இதற்கெனத் தீர்வுகள் உருவாக்கப்படும். அதைப் பற்றி யோசித்து மண்டையை உடைத்து கொள்ள வேண்டியதில்லை.

பெண்கள் அர்ச்சகராகத் தான் ஆக வேண்டுமா வேறு வேலையே இல்லையா? என்று கேட்பவர்கள் இதற்கு முன் சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஏதேனும் பெண்ணை, சிறுமியை அழைத்து, ‘இந்த வேலையை ஒரு பெண்ணாக நீ செய்ய வேண்டாம்.என அவர்கள் வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்த நல்ல உள்ளமாக இருக்க வேண்டும். மற்றபடி எந்தப் பணியை செய்ய வேண்டும் செய்ய வேண்டாம் என பெண்கள் இனி தீர்மானித்துக் கொள்வார்கள்.

கிறித்தவம், இஸ்லாமிய மதங்களில் பெண்கள் ஏன் பாதிரியாராக, இமானாக இருக்கக்கூடாது என்பதும் ஒரு கேள்வி..பெரும்பான்மை மாறினால், சிறுபான்மை நம்மோடு காலப்போக்கில் இணைந்து கொள்வார்கள். நாம் உதாரணமாவோம்.

பெண்கள் அர்ச்சகராக வேண்டாம் என்பதற்கு வேறென்ன புதிய காரணங்கள் தேவைப்படுகிறது?

எந்தவொரு சமூக மாற்றமுமே தொடக்கத்தில் புரட்சியாகத் தானே நமக்கு அறிமுகமாகியிருக்கிறது.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response