அமேசான் இணையதளத்தில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் 2 தொடரின் முன்னோட்டம் மே 19ஆம் தேதி வெளியானது.
அதில், தமிழர்களை இழிவுபடுத்துகிற மாதிரி காட்சிகள் இருக்கின்றன என்பதால் அத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனக் கோரி, தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ்,மே 24 அன்று மத்திய தகவல் விளம்பரத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், “தி ஃபேமிலி மேன் எனப்படும் ஹிந்தி இணைய தளத்தொடரின் முன்னோட்டக் காட்சிகள் மிகவும் கண்டனத்துக்குரியது. இதில் இடம்பெற்ற காட்சிகள், ஈழ விடுதலை பற்றி இழிவாகவும், கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது கண்டனத்துக்குரியது. மேலும் இந்தத் தொடர் எந்த வகையிலும் கற்பனையிலும் கூட தமிழ் கலாசாரத்துக்கு மதிப்பு கொண்டிருப்பதாகக் கருத முடியாது.
இந்தத் தொடரில் தமிழ் பேசும் நடிகை சமந்தாவை பயங்கரவாதியாக முத்திரை குத்துவது உலகம் முழுதும் வாழும் தமிழர்களின் பெருமைக்கு எதிரானதாகும். இந்தத் தொடர் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களையும் மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே இந்தச்சூழலில் ஃபேமிலி மேன் 2 தொடரை தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஒளிபரப்பத் தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.
ஆனால், திட்டமிட்டபடி சூன் 3 ஆம் தேதி அத்தொடர் வெளியானது.
அதில், திட்டமிட்ட வன்மத்தோடு தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நேற்று (சூன் 7,2021) செய்தாயாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜிடம், இத்தொடர் குறித்துக் கேட்டபோது, அத்தொடரைத் தடை செய்யும் அதிகாரம் எங்களிடம் இல்லை, ஆனாலும் எங்கள் கோரிக்கையில் உறுதியாக இருக்கிறோம், அத்தொடரைத் தடை செய்யவேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.