3 கோடி கேட்டு என்னை மிரட்டினார் – நடிகை மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். 2019 ஆகஸ்ட் மாதம் திடீரென பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று (மே 28,2021), முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக “நாடோடிகள்” திரைப்பட நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

மலேசிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை சாந்தினி சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். 36 வயதான இவர் நாடோடிகள் உட்பட 5 படங்களில் நடித்துள்ளார். மலேசிய சுற்றுலாத் துறையிலும் பணிபுரிந்து வருகிறார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தமிழக தொழில்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் 2017 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. மலேசியாவில் முதலீடு செய்வது தொடர்பாக என்னிடம் பழகினார். நாளடைவில் இந்தப்பழக்கம் காதலாக மாறியது.

மணிகண்டன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதையடுத்து அவருடன் நெருங்கி பழகினேன். இருவரும் கணவன் மனைவியாகச் சுற்றி வந்தோம்.

தற்போது மணிகண்டன் என்னை திருமணம் செய்துக்கொள்ள மறுக்கிறார். அவரை நம்பி அவருடன் கடந்த 5 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்தேன். மணிகண்டனால் தான் 3 முறை கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளேன். திருமணம் செய்ய மறுத்ததுடன் அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடப் போவதாக மிரட்டுகிறார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்ககோரியும்,தனது அந்தரங்க புகைப்படத்தை மணிகண்டனிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்றும் சைபர் கிரைம் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் தனித்தனியாகப் பேசிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்,

3 வருடங்களாக அமைச்சராக இருந்துள்ளேன். என் மீது ஒரு சிறிய புகார் கூட கிடையாது. அவர் எதாவது காரணத்திற்காக என்னை வந்து சந்தித்திருக்கலாம். என்னுடன் சேர்ந்த அவர் புகைப்படம் எடுத்திருக்கலாம்.
தொழில் விஷயமாக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழர்கள் வருகிறார்கள். இவர் அப்படி என்னை வந்து சந்தித்திருக்கலாம். புகைப்படம் கூட எடுத்திருக்கலாம். அப்படியான ஒரு படத்தை வைத்துக்கொண்டு இப்போது வந்து என்னை மிரட்டுகிறார்கள். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது.

ஆட்சியெல்லாம் முடிந்த பின்னர் இப்படிப் பேசுகிறார். ஆட்சியில் இருக்கும்போது பேசியிருந்தால் கூட என்னவென்று கேட்டிருக்கலாம். யாரோ பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இருந்து இவ்வாறு செய்கின்றனர். ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் ஒருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் என்னிடம் பேசினார்கள்.சாந்தினியுடன் நீங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதை வைத்து காவல்துறையில் புகார் கொடுக்கப்போகிறோம் என்று மிரட்டினார்கள்.

புகார் கொடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் 3 கோடி பணம் தரவேண்டும் என்றனர்.

நான் தரமுடியாது என்று சொல்லிவிட்டேன். அதன்பின் புகார் கொடுத்துள்ளனர். இதை சட்டப்படி சந்திப்பேன் என மணிகண்டன் கூறியுள்ளார்.

Leave a Response