முஸ்லிம்கள் கோரிக்கை தமிழக அரசு ஏற்பு – கொரோனா கட்டுப்பாடுகளில் மாற்றம்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நேற்று முதல் வழிபாட்டுத் தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும், பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது, திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் வழிபாட்டுத் தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தளர்த்தி இரவு 10 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் புதிய கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

அதில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 11 ஆம் தேதி (இன்று) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப் படுகிறது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.வழிபாட்டுத்தலங்கள் அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி இரவு 10 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்க அனுமதிக்கப் படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விடக் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதிக்கப்படுகிறது.அனைத்துக்காட்சிகளின் போதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response