தமிழக சட்டமன்றத் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது – விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை களைகட்டியது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டனர்.

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பரப்புரை நேற்று முன்தினம் நிறைவடைந்தது.பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் சனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழக சட்ட சபைத் தேர்தலில் வாக்களிக்க 6.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கோவை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது….

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்டவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தகவல் தொழில்நுட்ப மென் பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான இன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன்படி பிரிவு 135-பி-ன் படி விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் கோவை டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் இருக்கும் தொழிலாளர் ஒருங்கிணைந்த கட்டிட வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) அலுவலகத்தில் தேர்தல் கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டு சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்தல் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம். அதற்குரிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.
தொழிலாளர் கோவை உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் 99411 21001, உதவி ஆய்வாளர்கள் பொள்ளாச்சி ரமேஷ்பாபு 82203 94840, பொள்ளாச்சி ஏ.சாந்தி 94421 77831, கோவை எஸ்.முருகானந்தம் 80563 88846, கோவை மு.க.அப்துல்கபூர் 98430 29910 ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம்.

தேர்தலின்போது சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response