தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் மோடி – எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் பாசக சார்பில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டும், கூட்டணிக் கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பொதுமக்களிடையே உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 30 ஆம் தேதி) தாராபுரம் வருகிறார்.

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் 3 ஆவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாருதி நகர் அருகே 68 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.

கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். மோடியின் வருகைக்காக 3 ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று மதியம் 12.30 மணிக்கு பொதுக்கூட்ட மேடையில் உரையாற்ற இருக்கும் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களம் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக, பாசக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த 13 வேட்பாளர்களையும் மேடையில் அறிமுகப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

அதனைத்தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் தேசிய சனநாயகக் கூட்டணியில் என்ஆர் காங்கிரசு 16, அதிமுக 5, பாசக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவர்களை ஆதரித்து பிரதமர் மோடி புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

ஏஎப்டி மில் திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று தாமரை, ஜக்கு, இரட்டை இலை சின்னங்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அனைத்து வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மோடியின் வருகைக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாகத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறுகையில், “மத்திய பா.ச.க அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதற்கு அ.தி.மு.க அரசும் துணை நின்றது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், பா.ச.கவும், அ.தி.மு.கவும் ஆளுநரைக் கொண்டு எழுவர் விடுதலைக்கு முட்டுக்கட்டைபோடுகிறது. மேலும் விடுதலை செய்வது போன்ற நாடகமும் நடத்துகிறார்கள். அதேபோல், மூன்று வேளாண் கருப்புச் சட்டங்கள், புதிய மின்சார சட்டங்கள் போன்ற விவசாய விரோத சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயத்தையே பா.ச.க அரசு அழிக்கப்பார்க்கிறது.மேலும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வருகிறது. இப்படித் தொடர்ந்து தமிழக மக்களின் உரிமையை மத்திய பா.ச.க அரசு பறித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், தனது சுயநலத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பா.ச.கவுக்குச் சேவை செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, தற்போது தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டங்களை எதிர்ப்பதாக மக்களை ஏமாற்றும் வகையில் எடப்பாடி செயல்பட்டு வருகிறார். இப்படி தமிழக மக்களுக்குத் துரோகம் செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசையும், தமிழகம் வரும் பிரதமர் மோடியையும் கண்டித்து தாராபுரத்தில் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Response