நாளை நடக்கும் முழுஅடைப்புப் போராட்டத்துக்கு ஆந்திர அரசு ஆதரவு – மோடி அதிர்ச்சி

மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்தாண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, கடந்த சனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியிலும் கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்துக்கு பின்னர் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடங்கி வரும் 26 ஆம் தேதியுடன் (நாளை) 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன. இதனைக் குறிக்கும் விதமாக, அன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன.

இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்குக் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மத்திய பாசகவுடன் நெருக்கமாக உள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரசுக் கட்சியும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சர் பெர்னி வெங்கட்ராமய்யா அமராவதியில் கூறுகையில்,

விசாகப்பட்டினம் எஃகு ஆலையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்க்கிறோம்.அதற்காக வரும் 26 ஆம் தேதி வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாய சங்கங்களுக்கு ஆதரவாகவும்,
விசாகப்பட்டினம் எஃகு ஆலையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும் ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக் கட்சி (ஒய்எஸ்ஆர்சிபி) முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கும்.

விசாகப்பட்டினம் எஃகு ஆலையைத் தனியார்மயமாக்கும் முடிவை எதிர்த்து ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆந்திர மக்களின் உரிமை மற்றும் இலட்சக்கணக்கான தெலுங்கு மக்களின் விருப்பத்திற்கு மாறாக விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார்மயமாக்க விடமாட்டோம்.ஏனெனில் மாநிலத்தில் எஃகு ஆலை நிறுவுவதற்கு, தெலுங்கு மக்கள் மாபெரும் தியாகங்களைச் செய்துள்ளனர்.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறின்றி அமைதியான முறையில் முழு அடைப்புப் போராட்டத்தை விவசாயிகள் சங்கங்கள் இணைந்து ஒய்எஸ்ஆர் கட்சி கடைபிடிக்கும். அதேநேரம் முழு அடைப்புப் போராட்டம் நடக்கும் நாளில், மதியம் 1 மணிக்குப் பிறகு அனைத்து அரசுப் பேருந்துகளும் இயக்கப்படும். அனைத்து அவசர சுகாதார சேவைகள் வழக்கம் போல் செயல்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர முதல்வரின் இந்த முடிவு பாசக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.