மிரட்டும் மோடி மிரளாமல் திருப்பி அடித்த கேரள முதல்வர்

கேரளாவில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி, ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு பிரதான குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷை மிரட்டி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளிக்க அமலாக்கப்பிரிவு கட்டாயப்படுத்தியதாக ஒலிநாடா ஒன்று கசிந்தது.அதுமட்டுமல்லாமல் ஸ்வப்னா சுரேஷுடன் காவலுக்குச் சென்ற இரு பெண் காவலர்கள் கூறுகையில் ” அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷை விசாரித்த போது, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கூற வலியுறுத்தினர்” எனத் தெரிவித்துள்ளனர்

இதை அடிப்படையாக வைத்துக் கடந்த இரு நாட்களுக்கு முன் அமலாக்ககப்பிரிவு அதிகாரிகள் மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில் ” தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளைக் கூற, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். அது தொடர்பான ஒலிநாடா எங்களுக்குக் கிடைத்தது. அதை ஆய்வு செய்தபோது அது ஸ்வப்னாவின் குரல் எனத் தெரியவந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12, 13 ஆம் தேதி ஸ்வப்னா சுரேஷை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்தபோது, முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டுகளைக் கூற வலியுறுத்தி, போலி ஆதாரங்களைத் தயாரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதன்படி, முதல்வர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப முயன்றதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது சிஆர்பிசி 120-பி, 195-ஏ, 192, 167 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

ஆனால், இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் நிருபர்கள் கேட்டபோது, எங்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. அவ்வாறு வந்தால், சட்டரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என எங்களுக்குத் தெரியும் எனத் தெரிவித்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வது இது தான் முதல் முறை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி அரசு, அமலாக்கத்துறையைத் தம் ஏவலாளகப் பய்ன்படுத்தி அரசியல்ரீதியான எதிராளிகளைப் பயமுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. கேரளாவிலும் இதே உத்தியைப் பயன்படுத்தி கேரள முதல்வரை மோடி மிரட்டுகிறார் என்று சொல்லப்பட்டது.இப்போது மாநில காவல்துறை அமலாக்கப்பிரிவு மீது வழக்குப்பதிவு செய்திருப்பதன் மூலம் அந்த மிரட்டலுக்குப் பயப்படாமல் பினராயிவிஜயன் திருப்பி அடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response