சென்னை புத்தகக் காட்சி தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கை

சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கவிருக்கிறது. மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் அக்கண்காட்சி தொடர்பாக கமல்ஹாசனின் மய்யம் பதிப்பகம் சார்பில் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு வெளீயிட்டிருக்கும் செய்திக்குறிப்பு…..

சென்னை புத்தகக் காட்சி வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து 44 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வு இது.

நமது தலைவர் திரு. கமல்ஹாசன் அரை நூற்றாண்டாக தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி வருபவர்.தமிழ்ச்சமூகம் புத்தகங்கள் வாசிக்கிற அறிவார்ந்த சமூகமாகத் திகழ வேண்டுமென்பது அவரது பிரதான அக்கறை.

பலகோடிப் பேர் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்வில் அவர் ஒவ்வொருவாரமும் புத்தகங்களைப் பரிந்துரைத்தார். அதன் விளைவாக அப்புத்தகங்கள் பெருமளவில் விற்பனையாயின. அச்சில் இல்லாத நூல்கள் மறுபதிப்பு கண்டன,

இதன் தொடர்ச்சியாக நம்மவர் நடத்தி வந்த மய்யம் பதிப்பகத்தின் சார்பாக சென்னை புத்தகக் காட்சியில் நாம் பங்கேற்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரங்கு எண் 513 மற்றும் 514 இல் தலைவர் கமல்ஹாசன் பரிந்துரைத்த நூல்களைக் காட்சிக்கு வைக்கிறோம்.

அரங்கில் நமது நற்பணி இயக்கமும் மக்கள் நீதி மய்யமும் செய்த பணிகளின் புகைப்படங்களின் தொகுப்பு இடம்பெற்றிருக்கும்.

மக்கள் நீதி மய்யத்தைப் பற்றி மேலதிக விவரங்கள் தேவைப்படுவோருக்கு விளக்க மக்கள் நீதி மய்யத்தின் தன்னார்வலர்கள் அரங்கில் இருப்பார்கள்.

புத்தகத்திருவிழா நடைபெறும் 14 நாட்களும் அன்றாடம் ஒரு புத்தகத்தை தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் டிவிட்டரில் பரிந்துரை செய்யவிருக்கிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

அனைவரும் சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தந்து புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் கொண்டாடும்படி அன்போடு அழைக்கிறோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response