அதிமுக பாமக – இரண்டரை மணி நேர கூட்டணி பேச்சு வார்த்தை

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தலைச் சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் முறையாக அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அதிமுக கூட்டணியிலும் கடந்த மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட பாசக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் அது உறுதியாகவில்லை.

அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று கூறப்பட்ட பாமக, கூட்டணியில் இடம்பெற கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று அறிவித்தது.

இதோடு மட்டும் நிற்காமல் இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.வன்னியர்கள் இடஒதுக்கீடு பிரச்னைக்கு முடிவு எடுத்தால் மட்டுமே கூட்டணிக்கு வருவோம் என்று வெளிப்படையாகவே தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இது சம்பந்தமாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி 2020 டிசம்பர் 1 ஆம் தேதி தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மனு அளித்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால்தான், வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை ராமதாஸ் முன் வைக்கிறார் என்று பேச்சு எழுந்தது. இதனால் ராமதாசைச் சமாதானப்படுத்த கடந்த டிசம்பர் மாதம் தமிழக அமைச்சர்கள் அன்புமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு, தேர்தலில் பாமகவுக்கு 41 தொகுதிகள் வேண்டும் என்றும், கூடுதலாக சில கோரிக்கைகளையும் ராமதாஸ் முன் வைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பில் இதற்கு சரியான பதில் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

இதனால் அதிமுக-பாமக கூட்டணி உறுதியாவது சந்தேகம் தான் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் சனவரி 31 ஆம் தேதி இணையவழி மூலமாக நடைபெறும் என்றும், இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக ராமதாஸ் அறிவித்தார்.

இதனால் பதட்டம் அடைந்த அதிமுக தலைமை, அவசர அவசரமாக கடந்த 30 ஆம் தேதி அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் கொண்ட 4 பேர் குழுவை தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. இந்தக் குழுவினர் கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேறு சில கோரிக்கைகள் குறித்தும் பேசினர்.

அப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதனால் பாமக நிர்வாகிகள் தமிழக அமைச்சர்களை பிப்ரவரி 3 ஆம் தேதி சந்தித்துப் பேசுவார்கள் என்றும் இராமதாசு அறிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11.15 மணிக்கு சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி வீட்டுக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஏ.கே.மூர்த்தி, தீரன், அருள்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, வழக்கறிஞர் பாலு ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். இதையடுத்து அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் அமைச்சர் தங்கமணி வீட்டுக்கு வந்தனர்.

அப்போது பாமக தரப்பில், 20 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் தங்களுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். தேர்தல் செலவுக்கான பணத்தைத் தலைமையிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் 20 முதல் 25 தொகுதிகள் வரை தரத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு மதியம் 1.45 மணிக்கு தனித்தனி காரில் வெளியே புறப்பட்டுச் சென்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவையும் எடுக்காததால், பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்து வருகிறது. இதனால் மீண்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response