சசிகலா விவகாரம் – அதிமுகவில் குழப்பம்

தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி அண்மையில் அளித்த பேட்டியில்,டிடிவி.தினகரனின் அமமுகவைச் சேர்ந்தவர்கள் சகோதரர்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, சசிகலா குறி்த்து, ‘‘கட்சியின் தலைவராக இருந்தவர். அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையாக போற்றக் கூடியவர். அம்மாவுடன் இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர்’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இருவரது கருத்து குறித்தும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…..

அதிமுகவின் கொள்கையை 2017 ஆம் ஆண்டே தெளிவுபடுத்தியுள்ளோம். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இன்றி கட்சியும் ஆட்சியும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளோம். அந்த நிலையில் நாங்கள் தெளிவாக உள்ளதால் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. உதயநிதியின் பேச்சு ஒட்டு மொத்தமாக பெண்ணினத்தை அவமானப்படுத்தும் செயலாகக் கருதி நாங்களே கண்டித்துள்ளோம்.

ஆனால், கோகுல இந்திரா அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவை உயர்த்திப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளுக்கு ஒத்துழைப்புத் தருவதுதான் முக்கியம்.

அதேபோல், இராஜேந்திர பாலாஜி கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் சகோதரர்களா? கட்சி ஒரு முடிவெடுத்துவிட்ட பின், அதைப் பின்பற்ற வேண்டும். இரட்டை இலையும் சின்னமும் அதிமுகவின் சொத்து. இந்த மாதிரியாக கருத்துகளை யாரும் சொல்லக் கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சசிகலா விரைவில் விடுதலையாகவிருப்பதால் அவரை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கட்சியை வலிமையாக்க வேண்டும் என்று அதிமுகவின் ஒரு சாராரும் அவர்களை எக்காரணம் கொண்டும் சேர்க்கக்கூடாது என இன்னொரு சாராரும் போட்டி போட்டுக்கொண்டிருகின்றனர்.

அதன் வெளிப்பாடுதான் இவையெல்லாம் என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.

Leave a Response