2020 இல் சிபிஎம் 2006 ஆம் ஆண்டே திமுக – இந்தியாவின் இளம் மேயர் சாதனை

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் என்ற கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

கேரளாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 5 இல் இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் இக்கட்சி தான் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, இக்கட்சியைச் சேர்ந்த ஒருவரை மேயராகத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இம்முறை மேயர் பதவியைப் பெண்ணுக்கு ஒதுக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ‘மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடந்தது.

இதில், திருவனந்தபுரம் முடவன்முகள் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்யா ராஜேந்திரனை மேயராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார்.

21 வயதே ஆகியுள்ள ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னால், 2006 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வைச் சேர்ந்த ரேகா பிரியதர்ஷிணி சேலம் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24.

இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்கிற பெருமையைப் பெற்றிருந்த அவர், இப்போது திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்யா ராஜேந்திரனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

21 வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வாழ்த்துகள் சகோதரி. 24 வயதில் எனக்கு வாய்ப்பு வழங்கிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், ஆருயிர் தலைவர் தளபதியார், சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் அவர்களை வணங்குகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response