அமைச்சர் பதவி கேட்டு பாசக எம்.எல்.ஏ மிரட்டல் – எடியூரப்பாவுக்குச் சிக்கல்

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். குணம் அடைந்த அவர், தான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும், தூக்க மாத்திரையை தெரியாமல் தின்றுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பட்டீல் யத்னால் விஜயாப்புராவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது…

முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சியின் பின்னணியில் பெரிய கதை உள்ளது. எல்லா விசயங்களும் எனக்குத் தெரியும். காலம் கூடி வரும்போது அனைத்தையும் பகிரங்கப்படுத்துகிறேன். மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறட்டும். அதன்பிறகு அனைத்தையும் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

பசனகவுடா பட்டீல் யத்னால் அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் அது கிடைக்கவில்லை என்றால் இதிலுள்ள இரகசியங்களை வெளியிடப்போவதாகவும் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response