தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி சலோ எனும் டெல்லி நோக்கிய போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு 8 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர், கொரோனா பரவல் எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போராடும் விவசாயிகளுடன் செவ்வாய்கிழமை பிற்பகலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விவசாயிகள் சங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, 2 ஆவது கட்டப் பேச்சு இன்று நடக்கிறது. இதற்கிடையே சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை கூட்டி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து இந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு வரும் 8 ஆம் தேதி வடஇந்தியா முழுவதும் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்று (02-12-2020) கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

அப்போது, வீரம் செறிந்த பஞ்சாப் மாநில விவசாயிகள் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்! அவர்கள் முன்னெடுத்த போராட்டம் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியானா, இராஜஸ்தான் மாநில விவசாயிகளையும் ஒன்றிணைத்துள்ளது. இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் நாமும் போராட்டக்களம் காண இருக்கிறோம்! நாளைய தினம் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது பற்றி ஆலோசித்து விரைவில் போராட்டக்களம் காண்போம்! வேளாண்மையை அழிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response