ஒரேயொரு புகைப்படத்தால் காற்றில் பறக்கும் தமிழகத்தின் மானம்

இரண்டு நாள் (நவம்பர் 21,22) அரசு முறைப் பயணம் என்ற பெயரில் அரசியல் காரணங்களுக்காக தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மரபை மீறி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றனர்.

பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடரும் என்று அறிவித்ததோடு, “நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா” என்றும் பலமாகத் துதிபாடினார்.

தனது பதவிக்காகவும், தனது மகனுக்கு அமைச்சர் பதவி கோரியும் பா.ஜ.க மேலிடத்தை வளைந்து வணங்கி வரும் ஓ.பன்னீர்செல்வம், விழா மேடையில் அமித்ஷாவுக்கு 60 டிகிரி கோணத்தில் குனிந்து வணக்கம் சொல்லி, மிகுதியான பவ்யம் காட்டியது பொதுமக்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

ஜெயலலிதா காலில் விழுந்து பதவி பெற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் தங்கள் பதவிக்காக யார் காலையும் பிடிப்பார்கள், எவர் காலையும் வாரிவிடுவார்கள் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் விமர்சிப்பதை அவ்வப்போது அ.தி.மு.க-வினர் மெய்ப்பித்து வருகிறார்கள்.

அமித்ஷாவுக்கு வளைந்து வணக்கம் சொன்ன ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மீம்களில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 40 டிகிரி கோணத்தில் வளைந்து வணக்கம் வைத்த ஓ.பி.எஸ், அமித்ஷாவுக்கு 60 டிகிரி கோணத்தில் வளைந்து வணக்கம் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

இந்த ஒரேயொரு புகைப்படத்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் மானம் மட்டுமின்றி அவர் சார்ந்த தேவர் சமுதாயத்தின் மானமும் தமிழகத்தின் மானமும் காற்றில் சேர்ந்து பறக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response