புதுச்சேரி ஜிப்மரில் வெளிமாநில மாணவர்களை
சேர்த்தால் கலந்தாய்வுக் கூடத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில்….
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் தொடர்ந்து வெளிமாநில மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய கல்வி ஆண்டிலும் (2020 – 2021) புதுச்சேரி மாணவர்களுக்கான 64 இடங்களில் 31 இடங்களை ஆந்திரா – தெலங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கி பட்டியல் வெளியிட்டுள்ளனர். இதுபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, போலி இருப்பிடச் சான்று பெற்று இவ்வாறு மருத்துவக் கல்லூரி இடங்களை பெற்றுள்ள வெளிமாநில மாணவர்கள் குறித்து விசாரிக்கப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் திரு. அருண் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், அவ்விசாரணை புதுச்சேரி ஆட்சியர் தலைமையில் அல்லது பணியில் உள்ள நீதிபதி தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள வெளிமாநில மாணவர்கள் மீது குற்றவழக்குப் பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் போலி இருப்பிடச் சான்று வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று(10.11.2020) மாலை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருணை நேரில் சந்தித்த தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க செயலாளர் திரு. த. இரமேசு, புதுவை தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் உதயசங்கர் ஆகியோர் இக்கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விசாரணை முறையாக நடக்கும் என்று அருண் உறுதியளித்தார். நாம் தமிழர் கட்சி, புதுச்சேரி மாணவர் முன்னணி, உலகத் தமிழ்க் கழகம், கைவினைஞர் வாழ்வுரிமைக் கட்சி, கைவினைஞர்கள் நலவாழ்வுச் சங்கம், திருகுறிப்பு தொண்டர் அறக்கட்டளை, சமூகன் சமூக சேவை அறக்கட்டளை, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி, மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.
இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களை சந்தித்த த.தே.பே. புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி, “ஜிப்மரில் வெளிமாநில மாணவர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தினால் தமிழின உணர்வாளர்களைத் திரட்டி, கலந்தாய்வைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் இறங்குவோம். உடனடியாக விசாரணையை நடத்தி, வெளிமாநில மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், புதுச்சேரி மாணவர்களைக் கொண்ட புதிய பட்டியலை வெளியிட வேண்டும்” என்று கூறினார்.