அரை இறுதியில் தோல்வி ஏன்? – டேவிட் வார்னர் விளக்கம்

அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல். 2020 இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதிச் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்கள் எடுத்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். ஷிம்ரன் ஹெட்மேயர் அதிரடியாக ஆடி 42 ரன்கள் சேர்த்தார். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா, ஹோல்டர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்கியது.

ஐதராபாத் அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கனே வில்லியம்சன் 67 ரன்களும், அப்துல் சமாத் 33 ரன்களும் குவித்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டே(21), ஜேசன் ஹோல்டர்(11), ராஷீத் கான்(11) ஆகியோரின் விக்கெட்டுகள் சரிவால் அணியின் ரன்வேகம் சற்று குறைந்தது.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அரைஇறுதிவரை முன்னேறி கடைசியில் தோல்வி அடைந்த காரணம் குறித்து பேசிய ஐதராபாத் அணித்தலைவர் டேவிட் வார்னர்,

தங்கள் அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சிறப்பாக இருந்ததாகவும், மைதானத்தில் அணுகுமுறை சரியாக இல்லாததே தோல்விக்குக் காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்தத்தொடரின் ஆரம்பத்தை விட பிற்பகுதியில் விளையாடிய ஆட்டங்களில் ஐதராபாத் அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்ட அவர் நடராஜன், ராஷீத் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் தங்கள் அணியின் பலமாக விளங்கியதாகத் தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி இறுதிச்சுற்றில் வரும் 10 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

Leave a Response