அடித்து ஆடி வெற்றி பெற்ற விராட்கோலி – ரசிகர்கள் உற்சாகம்

அபுதாபியில் ஐபிஎல் மட்டைப்பந்துப் போட்டிகளின் 15 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் முதலாவதாகக் களமிறங்கினர்.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மகிபால் லோம்ரோர் 47 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சார்பில் சாஹல் 3 விக்கெட்டுகளும், உதானா 2 விக்கெட்டுகளும், சைனி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்படி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் பட்டிக்கல் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர். அந்த ஜோடியில் ஆரோன் பிஞ்ச் 8(7) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அணித்தலைவர் விராட் கோலி, பட்டிக்கலுடன் ஜோடி சேர்ந்தார்.

சிறப்பான ஆட்டத்த்தினை வெளிப்படுத்திய இந்த ஜோடியில், இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின்னர் பட்டிக்கல் 63(45) ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் விராட் கோலி 72(53) ரன்களும், டி வில்லியர்ஸ் 8(9) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.1 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து, 158 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கோபால், ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விராட்கோலி சிறப்பாக விளையாடியதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Response