சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,,,,,,
‘நீட்’ தேர்வு எனும் கொலைக்கருவியைக் கொண்டு மாணவப் பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் மத்திய, மாநில அரசுகளின் கொடுங்கோன்மையைக் கண்டித்தும், ‘நீட்’ தேர்வை முற்றாக இரத்து செய்யக்கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக மாநிலம் முழுவதும் பதாகை ஏந்தும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அவரது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாணவர் பாசறை நிர்வாகிகளுடன் இணைந்து பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
முன்னதாக, காவிரி நதிநீர் உரிமை மீட்புப் போராட்டத்தில் தன்னுயிரை ஈகம் செய்த காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஈகைச்சுடரேற்றி வீரவணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
இன்று தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள், மாணவர் பாசறையினர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து நீட் தேர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தும் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் #BanNEETSaveStudents என்ற குறிச்சொல்லுடன் இணைத்து அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இதனால் ட்விட்டரில் (Twitter) இக்குறிச்சொல் இன்று அதிகம் பகிரப்படுபவைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.