தமிழகத்தில் இபாஸ் முறை இரத்து செய்யப்படாது – முதல்வர் பேச்சில் அம்பலம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூருக்கு ஆய்வு நடத்தச் சென்ற தமிழக முதல்வர், அங்குள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. கடலூரில் 39 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூரில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும் எனவே இ-பாஸ் அவசியம். கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதபோதும் கூட, தமிழகத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு

இவ்வாறு அவர் கூறினார்.

இபாஸ் நடைமுறையை வைத்துக்கொண்டு மக்களை முடக்கி வைக்கக்கூடாது என்கிற மத்திய அரசின் அறிவுரையை ஏற்று புதுச்சேரி அரசு இபாஸ் முறையை இரத்து செய்தது. அதனால் தமிழகத்திலும் அப்படி அறிவிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். முதலமைச்சரின் இந்தப் பேச்சிலிருந்து தமிழகத்தில் இபாஸ் முறை இரத்து செய்யப்படமாட்டாது என்பது தெளிவாகியுள்ளது.

Leave a Response