இந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா? – மதகுரு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பாஜகவினர், பெரியாரியல்வாதிகளையும், அம்பேத்கரியல்வாதிகளையும், முற்போக்காளர்களையும் இந்து விரோதிகள் இந்து விரோதிகள் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சியே இந்து விரோத கட்சி என்று இப்போது பார்ப்பன மத குருக்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இது குறித்து ஆங்கில இந்து நாளேட்டில், ‘The conservative challenge to hindutva’ என்ற தலைப்பில் சாஜன் குமார் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியிருக்கிறார். விரிவான தகவல்கள் பல அவற்றில் இடம் பெற்றிருக்கின்றன.

இரண்டு குற்றச்சாட்டுகளை, ஒரு சங்கராச்சாரியும், பார்ப்பன மதக்குருவும் வைக்கிறார்கள். ஒன்று, அயோத்தியில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆகஸ்டு 5 ஆம் நாள் இந்து தர்ம படி நல்ல நாள் அல்ல அல்லது கெட்ட நாள். இந்து நாட்காட்டி படி ‘பத்ரபாத்’ (Bhadrapad) என்று சொல்லக்கூடிய மாதத்தில் கடவுளுகளுக்கான இந்த சடங்குகளை நிகழ்த்தவே கூடாது. பத்ரபாத் (ஜூலை, ஆகஸ்ட்) மாதங்கள் கடவுள்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் நாட்கள் என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே கடவுள்களுக்கு தொல்லை கொடுத்து அவைகளை எழுப்பி கோவிலைக் கட்டுவதற்கான முயற்சி என்பது அய்தீகத்திற்கு எதிரானது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மற்றொன்று, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அலகாபாத் கும்பமேளாவில் முழுக்குப் போட்ட பிரதமர் மோடி ஓட்டுகளுக்காக இரண்டு தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவினார் அது மிகப்பெரிய விளம்பரமாக மாறியது. அது இந்து மத சாஸ்திர சடங்குகளுக்கு எதிரானது என்று பார்ப்பன மத குருக்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.

இந்துத்துவா அரசியல் என்பது பெரும்பாலான ஒடுக்கப்பட்ட இந்து மக்களின் வாக்கு வங்கிகளை கோரி நிற்கிற அரசியல். அதில் இந்து தர்மத்தைக் கொண்டு வந்து புகுத்துகிற போது அது பார்ப்பன உயர்ஜாதி தர்மமாக இருப்பதால் இந்து மதத்திற்கும் இந்துத்துவ அரசியலுக்கும் இடையே முரண்பாடுகள் முட்டி மோதி வெளியே வரத் துவங்கிவிட்டன.

அதைத்தான் நாம் வேறு மொழிகளில், இப்போது நடப்பது இந்துக்களில் உள்ள ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை இந்துக்களுக்கும், இந்து தர்மம் பேசுகிற பார்ப்பன உயர்ஜாதி இந்துக்களுக்கும் இடையே நடக்கின்ற போராட்டம் தான் இப்போது நடக்கிற போராட்டம் என்று நாம் கூறி வருகிறோம். அந்தக் கருத்து இப்போது வேறு மொழிகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றிய செய்தியும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ‘சன்ஸ்கார் பாரதி’ (Sanskar Bharti) என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் ஒன்று அதனுடைய பொறுப்பாளராக இருக்கிற ‘அமிர்சந்த்’ (Amirchand) என்பவர் ஒரு தகவலை கூறியிருக்கிறார். ‘மனுசாஸ்திரத்தில் சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக இருக்கின்ற பகுதிகளை நீக்கிவிட வேண்டும். அதே போல் இராமாயணத்தில் சூத்திரர்களை இழிவுபடுத்துகிற பகுதிகளை நீக்கிவிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் இது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்ற தகவல்களை அவர் வெளியிட்டிருப்பதாகவும், அதே போல ஆர்.எஸ்.எஸ்- இன் மற்றொரு அமைப்பான ‘அகில் பாரதிய இதிய சங்லன் யோஜனா’ (Ahil Bhartia Ithiya Sankalam Yojana) என்றஅமைப்பினுடைய அமைப்பாளர் ‘பால்முகுந்த் பாண்டே’ (Balmukund Pandey) என்பவர் , இராமாயணத்தில் பல பகுதிகள் நீக்கப்பட வேண்டும். இராமாயணத்தில் பல பகுதிகள் இராமனுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை’ என்று ஒரு கருத்தை முன்வைத்திருப்பதாக அந்தக் கட்டுரை கூறுகிறது.

ஆக இந்து தர்மம், மனு சாஸ்திரம், இராமாயணம் இவைகளெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கி இருக்கின்றன. அவைகளெல்லாம், மக்களை இழிவு படுத்துவதை எப்படி ஏற்க முடியும் என்று நாம் கேட்டதை இப்போது அவர்களே புரிந்து கொண்டு வெகு மக்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக அந்தப் பகுதிகளை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவ அரசியலுக்காக பார்ப்பனிய பெருமைகளைக் குலைத்துக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பனிய மதக்குருக்கள் பாஜகவை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆக சங்கிகளும் பாஜகவும் நடத்துகிற இந்து தர்ம, இந்துத்துவ அரசியலின் இடையே நடந்து கொண்டிருக்கிற இந்த முரண்பாடுகளை மக்கள் கவலையோடு சிந்திக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்த நாடகம் எங்கே போய் முடியும் என்று சொன்னால் பார்ப்பனிய தர்மத்தைத் தூக்கி நிறுத்தத் தான் பயன்படும் அங்கே தான் போய் முடியும் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

– விடுதலை இராசேந்திரன்

Leave a Response