
ஈரோடு, கனிராவுத்தர் குளத்தை மீட்கக் கோரி, திங்கள்கிழமை (செப்டம்பர் 14)முதல் குளம் மீட்பு இயக்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் கண.குறிஞ்சி, பொன்னையன், சண்முகம், ரத்தினசாமி, காசியண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன் கூறியது:
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் உடைக்கப்பட்ட மதகு கட்டுமானத்தை பழைய அளவுக்கு உயர்த்திக் கட்டி நீரைத் தேக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தின் நீர் நிலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத அனைத்து ஏரி, குளம், குட்டை, கண்மாய் ஆகிய நீர் நிலைகளை பாதுகாக்கவும், புதிய நீர்நிலைகளை உருவாக்கவும், ஒரு புதிய தொழில்நுட்ப வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
ஈரோடையில் நீராதாரங்களை அகப்படுத்தும் கொள்ளையர்களுக்கு எதிராக நமது தமிழ்த்தேச நடுவ ஒருங்கிணைப்பாளரும், கனிராவுத்தர் குளம் மீட்பியக்க ஒருங்கிணைப்பாளரான தோழர் நிலவன் பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்தார், அதன்விளைவாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவரும் ஆக்கரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் ஈரோடை மாநகர ஆணையமும், உள்ளூர் திட்டகுழுமமும் மெத்தனபோக்கை கடைபிடித்துக்கொண்டிருக்கிறது, ஆகவே குளத்தின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி கனிராவுத்தர்குளத்தை மீட்க இரண்டாம் நாளாக உண்ணாப்போராட்டத்தை தொடர்ந்துள்ளார். தோழருடன் ஒருங்கிணைந்து அக்கிரமிப்புகளை அகற்றி நீராதரங்களை காக்க வழிவகுப்போம்.


