வரவேண்டிய காவிரி நீர் வரவில்லை அரசுக்கு நினைவிருக்கிறதா? – பெ.மணியரசன் கோபம்

கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை உடனே பெற வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள அறிக்கையில்….

மேட்டூர் அணையில் காவிரியின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. ஒரு நாளைக்கு 1.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) அளவுக்குத் தண்ணீர் இப்பொழுது திறந்துவிடப்படுகிறது. இதுவும் கடைமடைப் பகுதிக்கு போய்ச் சேரவில்லை என்ற குறைபாடு இருக்கிறது.

இன்று (06.07.2020) பிற்பகல்படி மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு 487 கன அடி. இப்பொழுதுள்ள நீர் மட்டம் 84.3 அடி. இப்போதுள்ள நீரின் கொள்ளளவு 46.45 ஆ.மி.க. (டி.எம்.சி.).

குறுவை நடவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. இன்னும் 65 நாட்களுக்கு குறுவைக்குத் தண்ணீர் தேவைப்படும். இப்பொழுதுள்ள நீரின் வரத்தும், மேட்டூர் அணையில் உள்ள நீரின் இருப்பும் இதே விகிதத்தில் குறைந்து வந்தால், குறுவை சாகுபடியைக் காப்பாற்ற முடியாத அவலம் ஏற்படும் நிலை உள்ளது.

சூன் மாதத்திலிருந்து கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்கு, தமிழ்நாடு அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை.

சூன் மாதம் 9.23 ஆ.மி.க. (டி.எம்.சி), சூலை முதல் வாரத்தில் 7.84 ஆ.மி.க., இரண்டாவது வாரத்தில் 7.84 ஆ.மி.க. என மொத்தம் 24.91 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்திருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு (2019) வெள்ளப்பெருக்கினால் 2020 சூனில் 100 அடி வரை தேங்கியிருந்த மேட்டூர் அணை நீரை மரபுப்படி சூன் 12ஆம் தேதி – முதலமைச்சரே வந்து திறந்துவிட்டார். அதில் காட்டிய பேரார்வத்திற்குப் பிறகு, சூன் – சூலைக்குரிய தண்ணீரைப் பெறுவதில் அக்கறை காட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

கடந்த 11.06.2020 அன்று காணொலிக்காட்சி வழி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் முடிவில், சூன் – சூலை மாதங்களுக்குரிய தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு ஆணையிட்டிருப்பதாக ஆணையத் தலைவர் ஆர்.கே. ஜெயின் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்குக் கூடுதல் பொறுப்பாக தலைமை வகிக்கும் அதிகாரிகள், 2018 இலிருந்து ஒவ்வொரு கூட்டத்திலும் இவ்வாறு, “கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறார்கள்”! ஆனால், ஒருதடவை கூட கர்நாடக அரசு அதை செயல்படுத்தியதில்லை! இப்போதும் செயல்படுத்தவில்லை!

முந்தைய ஆண்டில் கர்நாடகம் மிகையாக திறந்துவிட்ட வெள்ள நீரை, அதற்கு அடுத்த ஆண்டு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீர்க் கணக்கில் சேர்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது ஆணையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையையும் குறுவை சாகுபடியையும் நினைவில் வைத்திருக்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்துடனும், கர்நாடக அரசிடமும் தொடர்பு கொண்டு, சட்டப்படி சூன் – சூலைக்குத் திறக்க வேண்டிய தண்ணீரைப் பெற்று குறுவை சாகுபடியைக் காப்பாற்ற வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response